புதுச்சேரி: மத்திய அரசின் கல்வி அமைச்சக அதிகாரிகள் ஆரோவில்லை பார்வையிட்டு, அதன் வளர்ச்சிக்கு உதவுவதாக கூறினர். மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் முக்கிய அதிகாரிகள் குழுவினர் இன்று (மே 8) ஆரோவில் வந்தனர். இந்தக் குழுவில் கல்வி அமைச்சகத்தின் இணை செயலர் கோவிந்த் ஜெய்ஸ்வால், துணை செயலர் சைலா ஷா மற்றும் அதிகாரிகள் சமீர் பக்ஷி, நவீன் குமார், மற்றும் அங்ஷுமன் பாசு ஆகியோர் இருந்தனர்.
அவர்கள் ஆரோவில் அறக்கட்டளையின் பல பகுதிகளை சுற்றிப் பார்த்தனர். ஒவ்வொரு பகுதியின் மேலாளர்கள் மற்றும் ஊழியர்களுடன் பேசி, அவர்களின் வேலைகளைப் பற்றி அறிந்து கொண்டனர். ஆரோவில்லில் இசை மூலம் கல்வி மேம்பாட்டு தொடர்பாக செயல்படும் இசைக் கருவிகள் தயாரிப்பு பிரிவான ஸ்வரம் செயல்பாடுகளை ஆய்வு செய்தனர்.
அத்துடன் ஜாம்-ஜூஸ் தயாரிக்கும் உணவுப் பிரிவு, வாசனை மெழுவர்த்தி தயாரிப்பு பிரிவு உட்பட பல பிரிவுகளையும் பார்த்தனர். ஆரோவில்லில் புதிய கல்விக் கொள்கை செயல்பாடு தொடர்பாகவும் அவர்கள் ஆரோவில் நகர மேம்பாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் சிந்துஜா, அந்திம், மற்றும் ஜோசேபா (செயற்குழு உறுப்பினர்) ஆகியோரைச் சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பில், ஆரோவிலின் தற்போதைய வளர்ச்சி பணிகளைப் பற்றி விவாதித்தனர். மத்திய கல்வி அமைச்கத்தின் கீழுள்ள ஆரோவில்லில் செயல்பாடுகளை ஆய்வு செய்தனர். பின்னர், ஆரோவில் அறக்கட்டளையின் வளர்ச்சிக்கு உதவுவதாக கல்வி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.