சென்னை: பிஎஸ் டேட்டா சயின்ஸ், பிஎஸ் எலெக்ட்ரானிக் சிஸ்டம் ஆன்லைன் பட்டப் படிப்புகளை தொடர்ந்து ஏரோநாட்டிக்ஸ், பொருளாதாரம் தொடர்பான ஆன்லைன் பட்டப் படிப்புகளை சென்னை ஐஐடி விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
மத்திய கல்வி அமைச்சகம் வியாழக்கிழமை அன்று வெளியிட்ட என்ஐஆர்எஃப் தரவரிசையில் ஒட்டுமொத்த கல்வி நிறுவனப் பிரிவில் சென்னை ஐஐடி தொடர்ந்து 7-வது ஆண்டாகவும், பொறியியல் பிரிவில் தொடர்ந்து 10-வது ஆண்டாகவும் முதலிடத்தை பிடித்து சாதனை புரிந்துள்ளது.
இந்நிலையில், ஐஐடி இயக்குநர் வி.காமகோடி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: “மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் பல்வேறு மதிப்பீடுகளின் அடிப்படையில் 16 பிரிவுகளின்கீழ் என்ஐஆர்எஃப் தரவரிசை ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.
அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான தரவரிசையில் சென்னை ஐஐடி ஒட்டுமொத்த கல்வி நிறுவன பிரிவில் தொடர்ந்து 7-வது ஆண்டாகவும், அதேபோல், பொறியியல் பிரிவில் தொடர்ந்து 10-வது ஆண்டாகவும் முதல் இடம் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி ஆராய்ச்சி பிரிவில் 2-ம் இடத்தையும், புதுமை கண்டுபிடிப்பு பிரிவிலும், இந்த ஆண்டு முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நீடித்த வளர்ச்சி இலக்கு பிரிவிலும் முதல் இடத்தை பிடித்துள்ளது.
மத்திய அரசின் இந்த அங்கீகாரம் எங்களுக்கு உத்வேகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கிறது. இதற்காக ஐஐடி பேராசிரியர்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
2030-ம் ஆண்டில் வளர்ந்த பாரதம் என்ற பிரதமரின் இலக்கை நோக்கி சென்னை ஐஐடி தொடர்ந்து பயணம் செய்யும். அந்த வகையில், புதுமை கண்டுபிடிப்பிலும், காப்புரிமை பெறுவதிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படு்ம். அதன்படி, ஒருநாளைக்கு ஒரு புத்தாக்க நிறுவனம் (ஸ்டார்ட்-அப்) என்ற வகையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்க ஊக்கம் அளிக்கப்படும்.
கடந்த ஆண்டு 100 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. எந்த நாடு தொழில்நுட்பத்துக்கு அதிக உரிமை கோருகிறதோ, அந்த நாடுதான் வல்லரசு நாடாக உருவாக முடியும். எதிர்கால திட்டங்கள் என்ற அடிப்படையில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்காக விரைவில், புதிய நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்படும். உயர்கல்வி செல்வோரின் எண்ணிக்கையை 50 சதவீதமாக அதிகரிக்க தேசிய கல்விக்கொள்கை 2020-ல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
அந்த இலக்கை நோக்கி செல்லும் வகையில், தற்போது நாங்கள் மேற்கொண்டு வரும், ‘வித்யா சக்தி’ கல்வி திட்டத்தை மேலும் தீவிரமாக செயல்படுத்த உள்ளோம். ஐஐடியில் வழங்கப்பட்டு வரும் பிஎஸ் டேட்டா சயின்ஸ் மற்றும் புரோகிராமிங், பிஎஸ் எலெக்ட்ரானிக் சிஸ்டம் ஆகிய ஆன்லைன் பட்டப்படிப்புகளில் 28 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர்.
ஆன்லைன் படிப்புகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்து படிக்கின்றனர். விரைவில் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் பொருளாதாரத்தில் ஆன்லைன் பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளோம். நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடிக்களும் ஆன்லைன் படிப்புகளை வழங்க தொடங்கினால் 10 லட்சம் மாணவ-மாணவிகள் ஐஐடியில் சேர்ந்து படிக்கலாம்.
ஐஐடி ஆன்லைன் பட்டப் படிப்புகள் ரெகுலர் வழியில் வழங்கப்படும் பட்டப் படிப்புகளை காட்டிலும் எந்த வகையிலும் குறைந்தது அல்ல. பிஎஸ் ஆன்லைன் படிப்பு படித்த மாணவர்கள் எம்இ, எம்டெக் மாணவர் சேர்க்கைக்கான ‘கேட்’ நுழைவுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தரவரிசையில் முன்னணியில் இடம்பெற்றிருப்பதே அதன் கல்வித்தரத்துக்கு சான்று” என்று காமகோடி கூறினார்.