சென்னை: ‘டெட்’ தேர்வு விவகாரத்தில் விரைவில் ஒரு நல்ல தீர்வை எட்டுவதற்கான செயல்பாடுகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து விதமான பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர தகுதித் தேர்வில் (டெட்) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த நடைமுறை தமிழகத்தில் 2011-ம் ஆண்டில் அமலுக்கு வந்தது. அதன்பின் தமிழகத்தில் டெட் தேர்ச்சி அடிப்படையிலேயே ஆசிரியர் பணிநியமனம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பணியில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் டெட் தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அதிரடியாக உத்தரவிட்டது. இந்த அறிவிப்பால் தமிழகத்தில் சுமார் 1.5 லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை தீவிர ஆலோசனை செய்து வருகிறது. அந்த வகையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் ஆசிரியர் சங்கங்களின் கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன், இயக்குநர்கள் ச.கண்ணப்பன், பூ.ஆ.நரேஷ் உட்பட அலுவலர்கள் மற்றும் 36 ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் தொடக்கத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசும்போது, “ஆசிரியர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. தமிழக அரசு எப்போதும் உங்களுக்கு துணை நிற்கும். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் உரிய தீர்வு காணப்படும்” என்றார்.
அதைத் தொடர்ந்து பேசிய ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தல், ஆசிரியர்களுக்கு மட்டும் சிறப்பு டெட் தேர்வு நடத்துதல், டெட் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைத்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறும்போது, “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தில் கேள்விக்குறியை எழுப்புவதாக அமைந்துள்ளது. லண்டனில் இருந்தவாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் இது சார்ந்து ஆலோசனை செய்தார். அப்போது ஆசிரியர்களுக்கு சிறப்பு தேர்வை நடத்துவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக அவரிடம் தெரிவித்தோம். ஆனால், முதல்வரோ ஆசிரியர் சங்கங்களை அழைத்து அவர்களின் கருத்துகளை கேளுங்கள் என்றார்.
அதன்படி தற்போது நடத்தப்பட்ட கூட்டத்தில் ஒவ்வொரு விதமான கருத்துகளை ஆசிரியர் சங்கங்கள் கூறியுள்ளனர். நமது அடுத்தகட்ட நடவடிக்கையின் சாதகம், பாதகம் குறித்தும் பேசினோம். இதில் அரசியல் செய்யாமல் ஆசிரியர்களை பாதுகாக்கவே விரும்புகிறோம். எனவே, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யலாமா, சிறப்பு டெட் தேர்வு நடத்தலாமா என்பது தொடர்பாக ஆலோசித்துள்ளோம்.
இதில் பெறப்பட்ட கருத்துகளை முதல்வரிடம் தெரிவிப்போம். அவரின் அறிவுறுத்தலின்படி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இந்தியாவில் கல்வியிலும், கற்பித்தலிலும் நாம்தான் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறோம். எனவே, எங்கள் ஆசிரியர்களுக்கு ஒன்று என்றால் நாங்கள் சும்மா இருக்கமாட்டோம். அனைத்து வழிகளையும் முயற்சித்து ஆசிரியர்களை பாதுகாப்போம்” என்று அவர் கூறினார்.