சேலம்: அரசு பழங்குடியினர் பள்ளியில் பயின்ற மாணவி ஐஐடி-க்கான நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். சேலம் மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள கருமந்துறை கிராமத்தைச் சேர்ந்த ஆண்டி-கவிதா தம்பதியின் 3-வது மகள் ராஜேஸ்வரி. பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர், அங்குள்ள அரசு பழங்குடியின உறைவிட பள்ளியில் பிளஸ்-2 பயின்று, 600-க்கு 521 மதிப்பெண் பெற்றார். பின்னர், ஆசிரியர்கள் ஊக்குவித்ததால், அரசு சார்பில் பெருந்துறையில் செயல்படும் உயர்கல்வி பயிற்சி மையத்தில் ராஜேஸ்வரி சேர்ந்தார்.
மருத்துவராக வேண்டுமென்ற ஆசையுடன் இருந்த ராஜேஸ்வரி நீட் தேர்வுக்கு மட்டுமின்றி, ஐஐடி சேர்க்கைக்கான ஜேஇஇ தேர்வுக்கும் தயாரானார். ஜேஇஇ மெயின் தேர்வில் வெற்றி பெற்றதும், ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கு முனைப்புடன் பயின்றார்.
இந்நிலையில், அந்த தேர்வில் வெற்றி பெற்று, அகில இந்திய அளவில் பழங்குடியினருக்கான பிரிவில் 417-வது இடம் பெற்றுள்ளார். மேலும், தமிழக அளவில் பழங்குடியின மாணவிகளில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். தையல் கலைஞராகப் பணியாற்றிய ராஜேஸ்வரியின் தந்தை ஆண்டி, உடல்நலக்குறைவால் 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். ராஜேஸ்வரியின் தாய் கவிதாவுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
ராஜேஸ்வரியின் மூத்த சகோதரி ஜகதீஸ்வரி பி.எஸ்சி. வேதியியல், அண்ணன் கணேஷ் பி.எஸ்சி. கணிதம் பட்டம் பெற்றுள்ளனர். தங்கை பரமேஸ்வரி கருமந்துறை பழங்குடியினர் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். வறுமையில் இருந்தாலும், தந்தையும், தாயும் ஊக்குவித்ததால் குடும்பத்தில் அனைவரும் நன்றாகப் படித்ததாக ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் பாராட்டு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “தந்தையை இழந்தாலும், அவரின் கனவை நெஞ்சில் சுமந்து, அதை நனவாக்கியிருக்கும் அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஸ்வரியின் சாதனைக்குப் பாராட்டுகள். அவரது உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் தமிழக அரசே ஏற்கும். ராஜேஸ்வரி போன்ற பலரும் சேருவதுதான் ஐஐடி-க்கு உண்மையான பெருமையாக அமையும். அதற்காக திராவிடமாடல் அரசு தொடர்ந்து உழைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.