சென்னை: பள்ளி மாணவர்கள் எழுதிய முதல்வரின் திறனாய்வுத் தேர்வு முடிவுகள் இன்று(ஜூன் 12) மதியம் வெளியிடப்பட உள்ளன. இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் ந.லதா வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்:
தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களின் திறனை கண்டறிவதற்கும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் 2023-ம் ஆண்டு முதல் முதல்வரின் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் 500 மாணவர்கள், 500 மாணவிகள் என மொத்தம் ஆயிரம் பேர் வரை தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு உதவித் தொகையாக ஒரு கல்வியாண்டுக்கு மாதம் ரூ.1000 வீதம் 10 மாதங்களுக்கு ரூ.10 ஆயிரம் என்றபடி இளநிலை பட்டப்படிப்பு வரை தரப்படும்.
அதன்படி நடப்பாண்டுக்கான முதல்வரின் திறனாய்வுத் தேர்வு ஜனவரி 25-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை ஒரு லட்சத்து 43,351 மாணவ,மாணவிகள் எழுதினர். தற்போது இதன் முடிவுகள் இன்று(ஜூன் 12) மதியம் வெளியிடப்பட உள்ளன. இதையடுத்து மாணவர்கள் தேர்வுத் துறை இணையதளத்தில்(www.dge.tn.gov.in) சென்று தங்கள் முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம். மேலும், ஊக்கத்தொகை பெறுவதற்கு தேர்வான மாணவர்களின் பட்டியலும் மேற்கண்ட வலைத்தளத்திலேயே வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.