சென்னை: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநிரவல் கலந்தாய்வு இன்று (ஜூலை 7) நடைபெற உள்ளது.
அதேநேரத்தில், உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய நிதித்துறை வலியுறுத்தினால், அதற்கு முன்பு சில கோரிக்கைகளை பள்ளிக்கல்வித் துறை பரிசீலனை செய்ய வேண்டும். பணிநிரவலுக்கு முன்பாக அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் 7 பட்டதாரி ஆசிரியர்கள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். பணிநிரவலில் கூடுதல் பணியிடங்களை மட்டுமே காண்பிக்க வேண்டும்.
அதேபோல, உபரி ஆசிரியர்களை பணிநிரவலில் வேறு பள்ளிக்கு செல்வதற்கு கட்டாயப்படுத்தக் கூடாது. விருப்பமுள்ள ஆசிரியர்களுக்கு மட்டுமே பணிநிரவல் செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.