அரசு உதவிபெறும் நகர்ப்புற தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் தள்ளிப்போகும் காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் முதல்வரின் காலை உணவு திட்டம் 2022-ம் ஆண்டு செப்.15-ல் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக, அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அதன் பிறகு, ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம் கடந்தாண்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள 30,992 அரசுப் பள்ளிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள 3,995 அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 17.53 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள 1,545 அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு நிகழாண்டு காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும் எனவும், இதன் மூலம் 1.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் எனவும் தமிழக அரசின் கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி நகர்ப்புற அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்போது தொடங்கப்படவில்லை. தொடர்ந்து, காமராஜர் பிறந்த நாளான இன்று(ஜூலை 15) அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படாததால் மாணவ, மாணவிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் 541 தொடக்கப் பள்ளிகள், 164 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 705 அரசுப் பள்ளிகள் உள்ளன. மேலும், 38 தொடக்கப் பள்ளிகள், 7 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 45 அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. இவற்றில், கிராமப் பகுதிகளில் உள்ள 24 அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம் கடந்தாண்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால், நகர்ப்புறங்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படாததால், கரூர் மாநகராட்சி பகுதியில் 11, குளித்தலை, பள்ளபட்டி பகுதிகளில் தலா 4, புகழூரில் 2 என மொத்தம் 21 அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இது குறித்து கரூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) முருகேசன் கூறியபோது, “காலை உணவு திட்டம் அமலாக்கம் குறித்து எவ்வித அறிவிப்பும் இதுவரை வரவில்லை” என்றார்.