கடந்த நூற்றாண்டுகளைப் போல இல்லாமல் இந்த நூற்றாண்டில் தொழில்நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தில் உள்ளது. இதனால், சில ஆண்டு களிலேயே நாம் கேள்விப்படாத புதிய பணிகள் உருவாகிவிட்டன. சில பணிகள் மறைந்தும் பெரும்பாலான பணிகளின் தன்மைகள் மாறியும் வருகின்றன.
புதிய வேலைவாய்ப்புகள்: அலுவலகப் பணிகளைப் பொறுத்தவரை ஒரே தலைமுறையில் டைப்ரைட்டிங் மெஷினில் ஆரம்பித்து டெஸ்க்டாப் கம்ப்யூட்டர், லேப்டாப், ஸ்மார்ட் போன், ஏ.ஐ. கருவிகள் என மாறிவிட்டோம். இதிலென்ன ஆச்சரியம், காலந்தோறும் தொழில்நுட்ப வளர்ச்சியால் மாற்றங்கள் நிகழ்வது வழக்கம்தானே என நினைக்கலாம்.
ஆனால், உங்களின் தற்போதைய தொழில்நுட்ப அறிவின் பயன்பாட்டுக் காலம் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஏனென்றால், அதற்குள் அதைவிட மேம்பட்ட ஒரு தொழில்நுட்பம் அறிமுகமாகிவிடும்.
உதாரணமாக, 1874இல் கண்டுபிடிக்கப்பட்டு 1880ஆம் ஆண்டில் அலுவலகப்பயன்பாட்டுக்கு வந்த டைப்ரைட்டிங் மெஷின்கள் சுமார் 120 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தின. 1940இல் ஆய்வகங்களில் பெரிய வடிவில் இருந்த கம்ப்யூட்டர்கள், வடிவத்தில் சிறிதாகி 1990களில் அனைத்து அலுவலகங்களிலும் இடம்பெற்றன.
அடுத்த பத்து ஆண்டுகளில் அது லேப்டாப்டாக மாறி, கணினிப் பணிகள் அனைத்தையும் மேற்கொள்ளும் வகையில் தற்போது ஸ்மார்ட் போன்கள் வந்துவிட்டன. இந்த வளர்ச்சிகளுக்கு இடையேயான கால இடைவெளியைக் கவனித்துப் பாருங்கள். உலகப் பொருளாதார மன்றம் (World Economics Forum) வெளியிட்டுள்ள ‘Future of Jobs Report 2025’ ஆய்வறிக்கையின்படி, புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் பல வேலைகளின் தன்மை முற்றிலுமாக மாற்றம் காணும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
மாற்றமே மாறாதது: முந்தைய தலைமுறையில் ஒருவர் ஒரு பணியில் சேர்ந்தால், ஓய்வுபெறும்வரை அதே பணியிலோ ஒரே நிறுவனத்திலோ பணிபுரிந்தது அந்தக் காலம். இனி வரும் காலத்தில் ஒரே வேலையில் அல்லது ஒரே நிறுவனத்தில் பல ஆண்டுகளாக ஒருவர் பணியாற்றுவார் என்பது சில துறைகளில் மட்டுமே சாத்தியம்.
மாறிவரும் தொழில்நுட்ப யுகத்தில் அவ்வப்போது உங்களது பணி தொடர்பான துறையில் நிறைய மாற்றங்கள் வரலாம். ஒரு குறிப்பிட்ட திறனைக் கற்றுக்கொண்டு அதன் மூலம் பணியில் சேர்ந்து வாழ்நாள் முழுவதும் அதே பணியில் நீடித்திருக்க முடியாது.
கால மாற்றத்துக்கு ஏற்ப உருவாகிவரும் புதிய பணிகளுக்குத் தேவையான திறன்களைக் கற்று (Skilling) அல்லது ஏற்கெனவே கற்றறிந்த திறன்களை ‘அப்டேட்’ செய்வது (Reskilling) அவசியம். உங்களது வேலை தொடர்பான திறன்களை மேம்படுத்திக்கொண்டே (Upskilling) இருக்க வேண்டும். போட்டி நிறைந்த சவாலான உலகில், வாழ்நாள் முழுவதும் கற்றல் என்பது தாரக மந்திரமாக இருந்தால் மட்டுமே வேலையில் நீடித்து நிலைக்க முடியும்.
– கட்டுரையாளர், துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு – தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோவை; karunas2k09@gmail.com