சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், கிண்டி பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், துறை செயலாளர் பொ.சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள முன்னாள் மாணவர்கள் சங்க மையத்தில் புதிதாக கட்டப்பட்ட புகழ் மண்டபம், சிறிய ஒளிப்பட அரங்கு மற்றும் விருந்தினர் அறைகளையும், கல்லூரி முகப்பில் புனரமைக்கப்பட்ட கடிகார கோபுரத்தையும் அமைச்சர் கோவி.
செழியன் திறந்து வைத்து பேசியதாவது: அகில இந்திய அளவில் முனைவர் பட்டம் பெரும் மாணவர்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அதேபோல், பெண்கள் உயர்கல்வி பயில்வதும் தமிழகத்தில்தான் அதிகம். 50 சதவீதத்துக்கும்மேல் பெண்கள் பயிலும் கல்லூரி இது. உயர்கல்வி துறை கூட்டம் நடக்கும்போது, மாநிலங்களுடன் மட்டும் போட்டி போடாமல், உலக நாடுகளுடன் போட்டி போடுகிறது என்ற சொல்லும் நிலையை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக பேசிய துறை செயலாளர் பொ.சங்கர், ‘‘அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்க வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு தோன்றுகிறது. அந்த அளவுக்கு உள்கட்டமைப்பு, தரம் இங்கே உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தை ரூ.500 கோடியில் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். முன்னாள் மாணவர்கள் கல்லூரிக்கு செய்துவரும் உதவிகள், மாணவர்களுக்கு வழங்கும் உதவித்தொகை மிகவும் பாராட்டுக்குறியது’’ என்றார்.