ஜார்ஜியா: அமெரிக்காவின் தென்கிழக்கு ஜார்ஜியா மாகாணத்தில் கட்டப்பட்டு வரும் ஹூண்டாய் தொழிற்சாலையில், தென்கொரியாவை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் சட்டவிரோதமாக பணியாற்றுவது தெரியவந்தது.
இவர்கள் சவானா என்ற இடம் அருகே எலாபெல் என்ற பகுதியில் உள்ள பேட்டரி தயாரிப்பு மையத்தில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் மற்றும் போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அவர்களை கண்டதும், சட்டவிரோதமாக பணியாற்றிய தென்கொரிய தொழிலாளர்கள் ஓடி மறைந்தனர். அவர்களை மடக்கிய அமெரிக்க போலீஸார் சுவர் ஓரமாக வரிசையாக நிற்க வைத்து கைது செய்தனர். அனைவரிடமும், சட்டபூர்வ ஆவணங்கள் உள்ளதா என விசாரித்தனர். சட்டவிரோதமாக தங்கியிருந்த தொழிலாளர்களுக்கு கைவிலங்கு இடப்பட்டது. இந்த நடவடிக்கையால் ஹூண்டாய் தொழிற்சாலை வளாகம் போர்க்களம் போல் காட்சியளித்தது. தப்பிக்க முயன்ற தொழிலாளர்கள் பலர் ஏசி காற்று வரும் குழாய்களுக்குள் சென்று பதுங்கினர். சிலர் கழிவு நீர் குளத்தில் இறங்கினர். அவர்களை படகில் சென்று அமெரிக்க போலீஸார் பிடித்த வந்தனர்.
இவர்களில் பலர் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ளனர். பலர் விசா காலம் முடிவடைந்து தங்கியுள்ளனர். இவர்கள் தென்கொரியாவைச் சேர்ந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அமெரிக்காவில் உள்ள தென்கொரிய தூதரகம் முன்வந்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த, தென்கொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் சோ ஹூயுன் அமெரிக்கா வரவும் தயார் என கூறியுள்ளார்.