இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கனமழையால் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சட்லெஜ், சீனாப், ராவி ஆகிய நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கனமழை, வெள்ளத்துக்கு இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். 2,200 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு கருதி 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்னர்.
இந்நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “இந்தத் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டும். மக்கள் சாலைகளில் அமர்ந்து போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதற்கு பதிலாக அவர்கள் தண்ணீரை தங்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்று கொள்கலன்களில் சேமிக்க வேண்டும். இந்தத் தண்ணீரை ஓர் ஆசீர்வாதமாக கருத வேண்டும். அணைகள் கட்டி இவ்வளவு தண்ணீரைச் சேமிக்க பொதுவாக 8-10 ஆண்டுகள் ஆகும்” என்றார்.
அமைச்சரின் இந்த சர்ச்சைக்குரிய கருத்தால் சமூக ஊடகங்களில் பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இவர்களில் ஒருவர், “டெரரிஸ்தானில் மட்டுமே ஒரு சில நகைச்சுவை நடிகர்கள் வெள்ளத்தை ‘தெய்வீகப் பரிசு’ என்று அழைக்க முடியும். கல்வியின் பற்றாக்குறை, வெள்ளத்தை விட பெரிய பேரழிவுகளை உருவாக்கும் என்பதற்கு இதுவே சான்று” என்று கூறியுள்ளார்.