சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட இந்திய விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள் அடங்கிய குழுவினர், ஆய்வுப் பணிகளை முடித்துக்கொண்டு டிராகன் விண்கத்தில், ஃபல்கான் 9 ராக்கெட் மூலம் பூமியை நோக்கி புறப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள ஆக்ஸியம் ஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனம், நாசா, இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவை இணைந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மற்றும் ஃபல்கான் 9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு கடந்த ஜூன் 25-ம் தேதி 4 விண்வெளி வீர்களை அனுப்பியது.
ஷுபன்ஷு சுக்லாவுடன் சேர்ந்து, அமெரிக்காவின் பெக்கி விட்சன் (கமாண்டர்) , போலந்தின் ஸ்லாவோசி உஸ்னான்ஸ்கி, ஹங்கேரியின் திபோர் கபு ஆகியோர் சர்வதேச விண்வெளி மையம் நோக்கி புறப்பட்டனர். அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து புறப்பட்ட விண்கலம், 28 மணி நேர பயணத்துக்குப்பின் சர்வதேச விண்வெளி மையத்தை ஜூன் 26-ம் தேதி மாலை சென்றடைந்தது.
சர்வதேச விண்வெளி மையத்தில் 18 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட இந்தக் குழுவினர் தங்களது ஆய்வுகளை முடித்துக்கொண்டு, டிராகன் விண்கலம் மூலம் இன்று பூமியை நோக்கிப் புறப்பட்டனர். இந்திய நேரப்படி மாலை 4.45 மணிக்கு விண்கலம் பூமியை நோக்கி புறப்பட்டது. இந்த விண்கலம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் பூமி வந்தடையும். அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரையில் விண்கலத்தை பாதுகாப்பாக தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.