வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் பல்வேறு நாடுகள் மீது அதிக வரிகளை விதித்த அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் உத்தரவுகள் சட்டவிரோதமானவை என்று கூறி, அந்த உத்தரவுகளை அமெரிக்க கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இது, ட்ரம்ப்புக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
‘இந்த விவகாரத்தில் அடுத்து என்ன?’ என்ற கேள்வி எழுகிறது. இந்தச் சூழலில், ‘வரிவிதிப்பு தொடர்பான ட்ரம்ப்பின் உத்தரவுகளை அமெரிக்க கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை அமெரிக்க உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தால், ட்ரம்ப் அரசு நிர்வாகம் வரி தொடர்பாக உலக நாடுகளுடன் நடத்தும் பேர அரசியல் முடிவுக்கு வரும். அமெரிக்காவின் எதிர்கால கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட நாடுகள் நிராகரிக்கும்; முந்தைய ஒப்பந்தங்களையும் கூட மறுபரிசீலனை செய்யக் கோரும் உரிமையைப் பெறும்” என்று அமெரிக்காவின் பிரபல சட்ட நிபுணர் ஒருவர் கூறுகிறார்.
மேலும், “இறக்குமதி வரியை எப்படியாவது விதித்தே ஆக வேண்டும் என்று நினைத்தால், ட்ரம்ப்புக்கு சில சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. ஆனால், முன்பைப் போல் வேகமாக, காத்திரமாக இல்லாமலே அந்த வரிவதிப்பு இருக்கும். உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமானால், கடந்த மே மாதம் அமெரிக்க வர்த்தக நீதிமன்றம், 1974-ம் ஆண்டின் வர்த்தகச் சட்டத்தின் கீழ், வர்த்தகப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக வரிகளை விதிக்க அமெரிக்க அதிபருக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரத்தையும் தாண்டிய அதிகாரத்தை கையில் எடுத்து இருப்பதாக சுட்டிக்காட்டியது. மேலும், அந்தச் சட்டம் 15% வரி விதிப்பு, அதுவும் 150 நாட்களுக்கு விதிக்கும் அளவுக்கு மட்டுமே அதிகாரம் கொண்டது என்றும் சுட்டிக்காட்டியது” என்று நிபுணர்கள் எடுத்துரைக்கின்றனர்.
இருப்பினும், வர்த்தக விரிவாக்கம் சட்டம் 1962-ஐ ட்ரம்ப் அரசு சுட்டிக்காட்டி வரி விதிப்பை நியாயப்படுத்த முயற்சிக்கலாம். அதைக் கொண்டே இரும்பு, அலுமினியம், ஆட்டோமொபைல் பொருட்கள் இறக்குமதி வரியை ட்ரம்ப் அரசு நிர்ணயித்தது. ஆனால், அத்தகைய வரிகளையும் கூட ட்ரம்ப் அதிபர் என்பதால் தன்னிச்சையாக விதித்துவிட முடியாது. அதற்கு வர்த்தகத் துறையின் ஆய்வறிக்கை தேவை என்று கூறப்படுகிறது.
இதனிடையே, “அனைத்து வரி விதிப்புகளும் தொடர்ந்து நடைமுறையில் உள்ளன. இந்த வரிகள் நீக்கப்பட்டால், அது நாட்டுக்கு ஒரு முழுமையான பேரழிவாக இருக்கும். இந்த தீர்ப்பு உறுதிப்படுத்தப்படுமானால், அது அமெரிக்க நாட்டையே அழித்துவிடும். இந்த தீர்ப்பை எதிர்த்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் முறையீடு செய்ய உள்ளோம். இந்த சவாலில் அமெரிக்கா இறுதியில் வெற்றி பெறும். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. நாங்கள் நீதிமன்றத்தில் இந்த சவாலை எதிர்கொள்வோம்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ரியாக்ட் செய்துள்ளார். ஆக, தற்போது அமெரிக்க உச்ச நீதிமன்றம் வழங்கக் கூடிய இறுதித் தீர்ப்பு இப்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
வரிவிதிப்புக்கு எதிரான தீர்ப்பு சொல்வது என்ன? – பரஸ்பர வரிவிதிப்பு என்ற அடிப்படையில், உலகின் பல்வேறு நாடுகளுக்கு எதிராக கடும் இறக்குமதி வரிகளை விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். பல மடங்கு உயர்த்தப்பட்ட சீனா மீதான வரியை பேச்சுவார்த்தைக்குப் பின் அவர் குறைத்தார். அதேவேளையில், இந்திய பொருட்களுக்கு ஏற்கெனவே 25 சதவீத வரி விதித்த ட்ரம்ப், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி கூடுதலாக 25 சதவீதம் வரியை விதித்து, மொத்த வரிவிதிப்பு 50% ஆக அவர் உயர்த்தினார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இத்தகைய நடவடிக்கைகளால் அமெரிக்காவுக்கான இறக்குமதி பாதிக்கப்படும், உள்நாட்டில் பொருட்களின் விலை உயரும், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று அமெரிக்க மக்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில், இந்த வரி விதிப்பு முடிவுகளுக்கு எதிராக கடந்த மே மாதம் நியூயார்க் வர்த்தக நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து அமெரிக்க கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு மேல்முறையீடு செய்திருந்தது.
இந்நிலையில், மேல்முறையீட்டு நீதிமன்றம் தற்போது அளித்த தீர்ப்பில், “உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கு எதிராகவும் அதிபர் ட்ரம்ப் அதிக வரிகளை விதித்துள்ளார். இதை நியாயப்படுத்தவே, தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப்பின் பெரும்பாலான வரிவிதிப்புகள் சட்டவிரோதமானவை. எனவே, கூடுதல் வரி விதிப்பை நீக்க வேண்டும்.
வரிகள் விதிப்பு என்பது அடிப்படையில், நாடாளுமன்றத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அது, வரிவிதிப்பில் அதிபருக்கு சில அதிகாரங்களை மட்டுமே நாடாளுமன்றம் வழங்கி உள்ளதை நினைவில் கொள்ளவேண்டும். எனினும், வரம்பற்ற அதிகாரத்தை அதிபருக்கு அமெரிக்க நாடாளுமன்றம் வழங்கவில்லை. அத்தகைய நோக்கத்தை அமெரிக்க நாடாளுமன்றம் கொண்டிருக்கவில்லை” என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் நியூயார்க் வர்த்தக நீதிமன்றத்தின் தீர்ப்பை, ஏறக்குறைய உறுதி செய்துள்ள கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றம், அதேநேரத்தில், மேல்முறையீடு செய்வதற்கு வரும் அக்டோபர் 14 வரை கால அவகாசத்தையும் அளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.