புதுடெல்லி: வரிகளையும் தடைகளையும் விதிப்பதன் மூலமாக ஆசியாவின் இருபெரும் பொருளாதாரங்களான இந்தியாவையும், சீனாவையும் மிரட்டி பணியவைக்க முடியாது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற எஸ்சிஓ மாநாடு மற்றும் ராணுவ பேரணியில் பங்கேற்றதற்குப் பிறகு முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்த புதின் இதுகுறித்து மேலும் கூறியதாவது: வரிகள் அதிகரிப்பு, வர்த்தக தடைகளை ஏற்படுத்துவது போன்ற செயல்களால் ஆசியாவில் வலிமை வாய்ந்த பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளான சீனா மற்றும் இந்தியாவை மிரட்டி பணியவைக்க முடியாது. காலனித்துவ சகாப்தம் இப்போது முடிந்துவிட்டது.
எனவே இந்த வழிமுறையை பின்பற்றி அமெரிக்கா தங்களது கூட்டாண்மை நாடுகளுடன் பேச முடியாது என்பதை இப்போதாவது உணர்ந்துகொள்ள வேண்டும். அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நிர்வாகம் பொருளாதார அழுத்தங்களை ஒரு கருவியாக பயன்படுத்தி ஆசியாவின் இரு பெரும் பொருளாதாரங்களை (சீனா, இந்தியா) பணியவைக்கும் வேலையில் ஈடுபடுகிறது.
அதிக வரிகளை விதிப்பதன் மூலம் இந்த நாடுகளின் தலைமையை பலவீனமாக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் சொந்த உள்நாட்டு அரசியல் வழிமுறைகள் மற்றும் சட்டங்கள் உள்ளன.
நீங்கள் இவ்வாறு நடந்து கொள்ளும்போது அந்த பெரிய நாடுகளின் தலைமை எவ்வாறு எதிர்வினையாற்ற முடியும். இதனை அமெரிக்கா சிந்தித்துப் பார்க்க வேண்டும். விரைவில் பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு அரசியல் ரீதியான பேச்சுவார்த்தை சகஜ நிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு புதின் தெரிவித்தார். இதனிடையே இந்த ஆண்டு இந்தியாவுக்கான உர விநியோ கத்தை அதிகரிக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது.