நியூயார்க்: வங்கதேசத்தில் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்ட மாணவர் போராட்டத்தை இந்தியா விரும்பவில்லை என்றும், இந்தியாவுடன் தங்கள் நாட்டுக்கு பிரச்சினை உள்ளது என்றும் அந்நாட்டை வழிநடத்தி வரும் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்ற முகமது யூனுஸ் பின்னர் பேசும்போது, “இந்தியாவுடன் வங்கதேசத்துக்கு பிரச்சினைகள் உள்ளன. இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம், வங்கதேசத்தில் அரசியல் மாற்றத்துக்கு வித்திட்ட மாணவர்களின் போராட்டத்தை இந்தியா விரும்பவில்லை.
அதோடு, வங்கதசத்தில் பிரச்சினைகளை உருவாக்கிய ஷேக் ஹசீனா, தற்போது இந்தியாவில் உள்ளார். இந்தியா அவருக்கு ஆதரவாக உள்ளது. இதுவும் இரு நாடுகளுக்கு இடையே பதற்றத்தை உருவாக்குகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை போலி ஊடகச் செய்திகள் இன்னும் மோசமாக்கின. வங்கதேசத்தில் நடந்த மாணவர் போராட்டம் ஒரு இஸ்லாமிய இயக்கம் என்ற பிரச்சார செய்திகள் இந்தியாவில் இருந்து நிறைய வருகின்றன.
சார்க் அமைப்பு ஒரு குறிப்பிட்ட நாட்டின் (இந்தியாவின்) அரசியலுக்கு ஏற்றதாக இல்லை என்பதால், அந்த அமைப்பே தற்போது இயங்கவில்லை. இதனால், பிராந்திய ஒத்துழைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் சுதந்திரமான, நேர்மையான, அமைதியான பொதுத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம், 12.6 கோடி வங்கதேச மக்களுக்கு நம்பிக்கை அளிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.