வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 2-ம் கட்ட வரிகளை விதிக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது ஏற்கெனவே ரஷ்ய எண்ணெய் வாங்குவதால் 25% கூடுதல் வரிக்கு ஆளாகியுள்ள இந்தியாவுக்கு இன்னுமொரு அடியாக அமையும்.
ஞாயிற்றுக்கிழமை ரஷ்யா உக்ரைன் மீது மிகப்பெரிய அளவில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 800 ட்ரோன்களை ஏவி ரஷ்யா நடத்திய தாக்குதலில் உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள அரசு அலுவலக வளாகம் பாதிப்புக்கு உள்ளானது. 4 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் ட்ரம்ப்பிடம், ரஷ்யா மீதோ அதனிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீதோ புதிதாக ஏதேனும் வரிகள் விதிக்க வாய்ப்பிருக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த ட்ரம்ப், “ஆம்” என்று தீர்க்கமாகச் சொன்னார். மேலதிக விவரம் ஏதும் அவர் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.
உக்ரைன் – ரஷ்யா போரை அதிபராகி 10 நாட்களில் முடிவுக்குக் கொண்டு வருவேன் என்று ஆட்சிக்கு வரும் முன் சூளுரைத்த ட்ரம்ப், இப்போது இது தான் நினைத்ததைவிட கடினமாக இருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் தொடர்வது அமெரிக்க நிர்வாகத்துக்கு குடைச்சலாக உள்ளது. ட்ரம்ப்பின் அமைதி முயற்சிகள் எதுவும் பலனளிக்கவும் இல்லை. இந்நிலையில் தான் 2-ம் கட்ட வரி விதிப்புகள் இருக்குமா என்பதற்கு ட்ரம்ப் ஆம் என்று சொல்லியுள்ளார்.
இது குறித்து என்பிசி ஊடகத்துக்குப் பேட்டியளித்த அமெரிக்க கருவூலத் துறை செயலர் ஸ்காட் பெசன்ட், “ரஷ்யப் பொருளாதாரத்துக்கு பின்னடைவு ஏற்பட்டால் மட்டும்தான் புதின் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கே வருவார். அதை நோக்கி அதிபரின் முடிவுகள் அமையும்” என்றார். இதனால், அடுத்த கட்டமாக வரி சாட்டையை
இந்தியா – அமெரிக்கா வரி சர்ச்சை பின்னணி: உலகளவில் அமெரிக்காவின் வர்த்தக கட்டமைப்பை மறுசீரமைக்கும் வகையில், பல்வேறு நாடுகள் மீது அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த சில மாதங்களாக கடுமையான வரிகளை விதித்து வருகிறார். இந்த நிலையில், இந்தியப் பொருட்களுக்கு ஏற்கெனவே 25 சதவீத வரி விதித்த ட்ரம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி, கூடுதலாக 25 சதவீதம் வரியை விதித்து, இந்தியாவுக்கான வரியை 50 சதவீதமாக உயர்த்தினார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
ட்ரம்ப்பின் வரிவிதிப்பு நடவடிக்கையால், இந்தியாவில் தொழில் துறை கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. தமிழகத்திலும் ஜவுளி, ஆடைகள், இயந்திரங்கள், ஆட்டோமொபைல், நகைகள், ரத்தினக் கற்கள், தோல் காலணிகள், கடல் பொருட்கள், ரசாயனங்கள் உள்ளிட்ட துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. திருப்பூரின் ஏற்றுமதி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.