வாஷிங்டன்: இந்தியா உலகில் உள்ள எந்த நாட்டில் இருந்தும் எண்ணெய் வாங்கலாம். ஆனால், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கக் கூடாது என அமெரிக்க எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து பேசிய கிறிஸ் ரைட், “உலகில் நிறைய எண்ணெய் ஏற்றுமதியாளர்கள் உள்ளனர். எனவே, இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கத் தேவையில்லை. ரஷ்யாவின் எண்ணெய் மலிவானது என்பதால் இந்தியா அதை வாங்குகிறது. யாரும் ரஷ்ய எண்ணெயை வாங்க விரும்பவில்லை, இதனால் அவர்கள் அதை தள்ளுபடி விலையில் விற்கிறார்கள். மலிவான விலையில் எண்ணெயை வாங்க இந்தியா ஒரு சமரசம் செய்ய முடிவு செய்துள்ளது. அது ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான மக்களைக் கொல்லும் ஒருவருக்கு பணம் கொடுப்பதாகும்.
இந்தியா எங்களுடன் இணைந்து எண்ணெய் வாங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். உலகில் உள்ள எந்தவொரு நாட்டிலிருந்தும் இந்தியா எண்ணெய் வாங்கலாம், ஆனால் ரஷ்ய எண்ணெயை வாங்க கூடாது. அதுதான் எங்கள் நிலைப்பாடு. நாங்கள் இந்தியாவை தண்டிக்க விரும்பவில்லை. ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறோம், மேலும் இந்தியாவுடனான எங்கள் உறவுகளை வளர்க்க விரும்புகிறோம்.
நான் இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன். நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம். இந்தியாவுடன் அதிக எரிசக்தி வர்த்தகத்தையும், அதிக தொடர்புகளையும் நாங்கள் எதிர்நோக்குகிறோம். ஆனால், இந்தியா மற்றொரு பிரச்சினையின் நடுவில் சிக்கியுள்ளது. அதிபர் ட்ரம்ப்பின் மிகப்பெரிய விருப்பம் உலகில் அமைதி நிலவ வேண்டுமென்பது. உக்ரைனில் ரஷ்ய போர் நிச்சயமாக கொடூரமானது. அது முடிவுக்கு வருவதை நாம் அனைவரும் பார்க்க விரும்புகிறோம். ஆனால் ரஷ்ய எண்ணெய் எங்கே போகிறது?. அது சீனா, இந்தியா மற்றும் துருக்கிக்குச் செல்கிறது. அது ரஷ்யாவின் இந்தப் போருக்கு நிதியளிக்க உதவுகிறது.” என்று ரைட் கூறினார்.
கடந்த செவ்வாயன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பேசிய ட்ரம்ப், உக்ரைன் போருக்கு இந்தியாவும் சீனாவும் “முதன்மை நிதியளிப்பவர்கள்” என்று குற்றம் சாட்டியிருந்தது நினைவுகூரத்தக்கது.