மாஸ்கோ: ரஷ்யா உருவாக்கி உள்ள புற்றுநோய்க்கான தடுப்பூசி விரைவில் சந்தையில் அறிமுகமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அரசின் அனுமதி கிடைத்ததும் இது சாத்தியமாகும்.
உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றான புற்றுநோயால் ஆண்டுதோறும் உலக அளவில் கோடிக் கணக்கான பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தச் சூழலில் புற்றுநோய்க்கான எம்ஆர்என்ஏ தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ரஷ்ய நாட்டின் சுகாதாரத் துறையின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மைய இயக்குநர் ஆண்ட்ரே கப்ரின் கடந்த ஆண்டு இறுதியில் தெரிவித்திருந்தார்.
இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையில், புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதை செலுத்தினால் கட்டி (ட்யூமர்) வளர்வதை தடுக்கப்படுவதை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். மேலும், இது பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு மனிதர்களிடத்திலும் சோதிக்கப்பட்டுள்ளது. அதற்கான செயல்திறன் 100 சதவீதம் துல்லியமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது பயன்பாட்டுக்கு பாதுகாப்பானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி ‘என்ட்ரோமிக்ஸ்’ என அறியபப்டுகிறது. ஏற்கெனவே ரஷ்யா உருவாக்கிய எம்ஆர்என்ஏ கரோனா தடுப்பூசி பணிகள் இந்த முயற்சிக்கு கைகொடுத்துள்ளது.
இந்த புற்றுநோய் தடுப்பு மருந்தை செலுத்தி மேற்கொண்ட சோதனையில் புற்றுநோய் கட்டிகள் அளவை குறைக்கவும், கட்டியின் வளர்ச்சியை தாமதப்படுத்தி உள்ளது என்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
புற்றுநோய் தடுப்பூசி சார்ந்த மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஆய்வுகள் வெற்றிகரமாக முடிந்துள்ளதாகவும், இது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும் ரஷ்ய நாட்டின் மத்திய மருத்துவ மற்றும் உயிரியல் அமைப்பின் தலைவர் வெரோனிகா கூறியுள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் இந்த புற்றுநோய் தடுப்பூசிக்கு அந்த நாட்டின் மருத்துவ துறை அனுமதை அளிக்க வேண்டி உள்ளது. அந்த அனுமதி கிடைத்தும் இது சந்தையில் பயன்பாட்டுக்கு வரும். அப்போது இதை உலக அளவிலான ஆய்வாளர்கள் பகுப்பாய்வு செய்வார்கள். அது மருத்துவ துறையின் வளர்ச்சியில் பலன் தரும் என நம்பப்படுகிறது.
அண்மையில் சீனா சென்ற போது ரஷ்ய அதிபர் புதின், மனிதர்கள் 150 ஆண்டுகள் வரை வாழும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்துள்ளது என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.