மாஸ்கோ: ரஷ்யாவில் சிறிய ரக பயணிகள் விமானம் நேற்று விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த 49 பேரும் உயிரிழந்தனர்.
சைபீரியாவில் இருந்து இயக்கப்படும் ரஷ்யாவின் அங்காரா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏஎன்-24 ரக பயணிகள் விமானம், ரஷ்யாவின் பிளாகோ வெஷ்சென்ஸ்க் நகரிலிருந்து, ரஷ்யாவின் அமுர் பகுதியில் உள்ள டிண்டா நகருக்கு நேற்று புறப்பட்டது. இதில் 5 குழந்தைகள் உட்பட 43 பயணிகளும், 6 விமான ஊழியர்களும் பயணம் செய்தனர்.
டிண்டா நகரை நோக்கி சென்ற விமானம் திடீரென விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையின் ரேடாரில் இருந்து மறைந்து, தொடர்பு துண்டானது. இதையடுத்து அந்த விமானத்தை தேடும் பணியில் மீட்பு ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டன. அப்போது டிண்டா நகரிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள அமுர் வனப்பகுதிக்குள் விமானம் விழுந்து தீப்பிடித்துக் கொண்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து மீட்பு குழுவினர் அங்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விமானத்தில் பயணம் செய்த 49 பேரும் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.