மாஸ்கோ: ரஷ்யாவின் கிழக்கு பகுதியான கம்சட்கா தீபகற்பத்தில் 8.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ரஷ்யாவின் குரில் தீவுகள் மற்றும் ஜப்பானின் வடக்கு தீவு பகுதியான ஹொக்கைடோவில் சுனாமி பேரலைகள் கரையை தாக்கின.
கம்சட்கா பகுதிக்கு கிழக்கு, தென்கிழக்கில் சுமார் 125 கிலோமீட்டர் தொலைவில் சுமார் 19.3 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம். இதையடுத்து ரஷ்யா, ஜப்பான் மற்றும் பசிபிக் கடலை ஒட்டியுள்ள நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மக்கள் உயரமான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதற்காக சைரன் ஒலிக்கப்பட்டது.
இந்நிலையில், சுமார் 4 மீட்டர் உயரம் வரையிலான சுனாமி பேரலைகள் ரஷ்யாவின் குரில் தீவு பகுதியை தாக்கியது. தொடர்ந்து ஹவாய், சிலி, ஜப்பான் மற்றும் சாலமன் தீவுகளில் சுனாமி எச்சரிக்கையை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் விடுத்தது. நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டதை ரஷ்யாவின் டாஸ் (TASS) செய்தி முகமை உறுதி செய்துள்ளது. மக்கள் அடைக்கலம் தேடி வீதிகளில் குவிந்ததாக டாஸ் தெரிவித்துள்ளது. அங்கு மின்சார வசதி மற்றும் மொபைல் நெட்வொர்க் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.
அலாஸ்காவில் உள்ள தேசிய சுனாமி எச்சரிக்கை மையமும் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. அலாஸ்கா, ஹவாய், கலிபோர்னியா, ஓரிகான், வாஷிங்டன் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் 7.4 ரிக்டர் அளவில் கம்சட்கா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த 1952-ல் இந்த பகுதியில் ஏற்பட்ட 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது ஹவாயில் 9.1 மீட்டர் அளவுக்கு சுனாமி பேரலைகள் எழுந்தன.