வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடி எனக்கு எப்போதும் நண்பர் என்று தடலாடியாக யுடர்ன் அடித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். அவருக்கு பதிலளித்துள்ளார் பிரதமர் மோடி. அவரது சூசக பதில் கவனம் பெற்றுள்ளது.
பாகிஸ்தான் மீதான ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை முடிவுக்குக் கொண்டு வந்தது நான்தான் என்று ட்ரம்ப் அடிக்கடி கூறியது, இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் இறக்குமதி வரி விதித்தது போன்ற காரணங்களால் இந்தியா – அமெரிக்கா உறவில் சமீபத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், ட்ரம்ப், பிரதமர் மோடியுடன் பேச முயற்சித்ததாகவும் ஆனால் 4 முறை ட்ரம்ப் அழைப்பை மோடி புறக்கணித்தார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம், “இந்தியாவுடன் உறவை புதுப்பிப்பீர்களா?” எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த ட்ரம்ப், “நான் எப்போதும் அதனை செய்வேன். நான் எப்போதும் மோடியுடன் நண்பராக இருப்பேன். அவர் ஒரு சிறந்த பிரதமர். ஆனால் இந்தத் தருணத்தில் அவருடைய செயல் எனக்குப் பிடிக்கவில்லை. இருப்பினும், இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு மிகவும் சிறப்பாகவே உள்ளது. அதனால், இது குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை. எப்போதாவது இதுபோன்ற தருணங்கள் ஏற்படுவதுண்டு. மற்றபடி, நான் எப்போதும் மோடியுடன் நன்றாகப் பழகி வருகிறேன். சில மாதங்களுக்கு முன்பு கூட அவர் அமெரிக்கா வந்து சென்றார்” என்றார்.
இதற்கு பிரதமர் மோடியும் உடனடியாக பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “அதிபர் ட்ரம்ப்பின் உணர்வுகளையும், இந்தியா – அமெரிக்கா உறவுகள் குறித்த அவரது நேர்மறையான மதிப்பீட்டையும் நான் ஆழமாகப் பாராட்டுகிறேன். இந்தியாவும் அமெரிக்காவும் மிக நேர்மறையான, முன்னோக்குச் சிந்தனையுடன் விரிவான மற்றும் உலகளாவிய கூட்டாண்மையைக் கொண்டுள்ளன.” என்று கூறியிருக்கிறார். இருப்பினும் ட்ரம்ப் உபயோகித்த நண்பர் என்ற வார்த்தையை மோடி உபயோகிக்கவில்லை. இது கவனம் பெற்றுள்ளது.
ட்ரம்ப்பின் திடீர் ட்விஸ்ட்டும், பிரதமர் மோடியின் பதிலும் ஒரு நேர்மறை கருத்துப் பரிமாற்றம், இது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மறுசீரமைப்பதற்கான வாயிற்கதவை திறந்துவிட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
முன்னதாக, “இந்தியாவையும், ரஷ்யாவையும் மோசமான சீனாவிடம் நாம் இழந்துவிட்டது போல் தெரிகிறது. அந்த நாடுகள் எதிர்காலத்தில் வளமாக இருக்கட்டும்” என சமூக ஊடகத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது விரக்தி கருத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில், அதிரடி யுடர்ன் எடுத்து மோடி நண்பர் என்று கூறியுள்ளார்.