மாஸ்கோ: அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் வெளிநாட்டினருக்கான குடியேற்ற விதிமுறைகளை கடுமையாக்கி வருகின்றன. இந்த சூழ்நிலையில், இந்தியர்களை அதிக அளவில் வேலையில் சேர்க்க ரஷ்ய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
இதுகுறித்து ரஷ்யாவுக்கான இந்திய தூதர் வினய் குமார் டாஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ரஷ்யாவில் மனித வளம் தேவைப்படுகிறது. இந்தியாவில் திறமையான மனிதவளம் உள்ளது. எனவே, ரஷ்ய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு அந்நாட்டு நிறுவனங்கள் அதிக அளவில் இந்தியர்களை பணியமர்த்தி வருகின்றன.
குறிப்பாக கட்டுமானம் மற்றும் ஜவுளி துறைகளில் பெரும்பாலானவர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். இதுபோல இயந்திரங்கள் மற்றும் மின்னணு துறைகளிலும் இந்தியர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தூதரக சேவைகளின் பணிச் சுமை அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ரஷ்யாவுடனான உறவுகள் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் முக்கிய தூணாக விளங்குகிறது. சமீப காலமாக ரஷ்யாவில் இந்தியர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்திய தூதரகத்தின் தரவுகளின்படி, ரஷ்யாவில் உள்ள இந்தியர்கள் எண்ணிக்கை 14 ஆயிரம் ஆகும். இதுதவிர, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 1,500 ஆப்கானியர்களும் அங்கு வசிக்கின்றனர்.
ரஷ்யாவில் உள்ள மருத்துவம் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் 4,500 மாணவர்கள் பயில்கின்றனர். இதில் 90% பேர் மருத்துவம் படிக்கின்றனர். மற்றவர்கள் பொறியியல், கணினி அறிவியல், போக்குவரத்து தொழில்நுட்பம், நிர்வாகம், வேளாண்மை மற்றும் நிதி மேலாண்மை தொடர்பாக பயில்கின்றனர்.