உக்ரைனில் மூன்றரை ஆண்டுகளாக நடந்து வரும் போர் காரணமாக உள்நாட்டில் போதைப் பொருள் கடத்தல், ஆயுதங்கள் கடத்தல், மனிதர்களை கடத்துதல், பொருளாதார குற்றங்கள் உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
ரஷ்யா தொடுத்த போர் தொடங்கி மூன்றரை ஆண்டுகள் ஆகி உள்ள நிலையில், உக்ரைனில் நிகழும் குற்றங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக ஐ.நா போதைப்பொருள் மற்றும் குற்றப்பதிவு அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் மற்றும் உற்பத்தி, ஆன்லைன் மோசடிகள், ஆயுதக் கடத்தல், பொருளாதாரக் குற்றங்கள், ஆட்கடத்தல், சட்டவிரோத வெளியேற்றம் ஆகிய 6 அம்சங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு ஐ.நா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின் விவரம்: உக்ரைன் மக்களுக்கு போர் சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. அதோடு, திட்டமிட்ட முறையில் நடக்கும் குற்றங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது. போருக்குப் பிந்தைய மறுகட்டமைப்புக்கான பயணத்தில் இது ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.
2022 முதல் உக்ரைனில் இருந்து கொகைன், ஹெராயின் போதைப் பொருட்கள் கடத்துவது வெகுவாகக் குறைந்துள்ளது. அதேநேரத்தில், கேத்தினோன்ஸ், மெதடோன் போன்ற சிந்தடிக் போதைப் பொருட்களின் கடத்தல் மற்றும் உற்பத்தி அதிகரித்துள்ளது. மெதடோனைப் பொறுத்தவரை உற்பத்தியில் பெரும்பகுதி உள்நாட்டிலேயே கடத்தப்படுகிறது. ஏனெனில், உள்நாட்டில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
போர் காரணமாக உள்நாட்டில் ஆயுதங்கள் கிடைப்பது எளிதாகியுள்ளது. போர்க் களத்தில் உள்ள உபரி ஆயுதங்கள் பொதுமக்களைச் சென்றடைவதால் வன்முறை அதிகரிப்பதற்கு அது வழிவகுக்கிறது. உக்ரைனில் இருந்து வெளிநாடுகளுக்கு ஆயுதங்கள் கடத்தப்படுவது தொடர்பாக ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றபோதிலும், அது குறித்து கண்காணிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
போர் காரணமாக உக்ரைனில் இருந்து 1.4 கோடி மக்கள் இடம் பெயர்ந்துள்ளார்கள். அவ்வாறு இடம்பெயர்பவர்களுக்கு மனிதாபிமான ரீதியில் உதவுவதாகக் கூறி சில குழுக்கள், அவர்களைக் கடத்தி கட்டாய உழைப்பை சுரண்டுகின்றன. நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் வெளிநாடுகளுக்கு ஆட்களைக் கடத்துவது குறைந்துள்ளது. எனினும், உள்நாட்டிலேயே மனிதர்கள் கடத்தப்படுவதும் அவர்களை கட்டாய பணிகளில் சேர்ப்பதும் அதிகரித்துள்ளது என்று ஐ.நா தெரிவித்துள்ளது.