காத்மண்டு: நேபாள முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததில் அவரது மனைவி உயிரிழந்துள்ளார்.
நேபாளத்தில் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட பதிவு செய்யப்படாத 26 சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்ததைக் கண்டித்தும், ஆட்சியாளர்களின் ஊழலைக் கண்டித்தும் தலைநகர் காத்மாண்டுவில் இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்தது. சமூக ஊடக தடைக்கு எதிரான போராட்டம், ஊழலுக்கு எதிரான போராட்டமாகவும் வலுப்பெற்றதோடு, அரசாங்கத்துக்குள்ளும் எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து பிரதமர் கே.பி.சர்மா ஒலி இன்று பிற்பகல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த கலவரத்தின் போது காத்மண்டுவில் உள்ள நாடாளுமன்ற கட்டிடம், அரசு அலுவலகங்கள், அரசியல் கட்சி தலைவர்களின் வீடுகள், நினைவுச் சின்னங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
இந்த சூழலில் டல்லுவில் உள்ள நேபாள முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதில் ஜலநாத் கானலின் மனைவி ராஜ்யலட்சுமி சித்ரகார் வீட்டுக்குள்ளேயே சிக்கிக் கொண்டார். பலத்த தீக்காயங்களுடன் அவரை அவரது உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் நுரையீரல் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டதால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முன்னதாக, சமூக வலைதளங்கள் மீதான தடையை விலக்க கோரியும், நாட்டில் பரவியுள்ள ஊழல் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரியும் நேற்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்று திரண்டு தலைநகர் காத்மாண்டுவில் பேரணி நடத்தினர். அப்போது, நாடாளுமன்றத்துக்கு வெளியே போடப்பட்டிருந்த தடுப்புகளை தாண்டி உள்ளே நுழைய போராட்டக்காரர்கள் முயன்றனர். நேபாள பிரதமர் சர்மா ஒலி வீட்டின் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து,போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் மூண்டது. பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் தோட்டாக்களால் சுட்டும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர். இதுவரை இந்த கடும் மோதலில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.