பெய்ஜிங்: சீன தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த சனிக்கிழமை முதல் கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். 136 கிராமங்களில் மின்சார விநியோகம் தடைபட்டது. 30-க்கும் மேற்பட்ட சாலைகள் சேதம் அடைந்தன.
இதையடுத்து கடந்த 4 நாட்களாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலை யில் இந்த மழை வெள்ளத்தில் சிக்கி 44 பேர் உயிரிழந்ததனர். 9 பேரை காணவில்லை. பெய்ஜிங்கின் வடக்கு மலைப்புர மாவட்டங்களான மியூன், யான் கிங் ஆகியவற்றில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக கடந்த திங்கட்கிழமை சீன அதிபர் ஜி ஜின்பிங், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெய்ஜிங் உள்ளிட்ட 9 பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள சீன நிதி மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சகம் கடந்த செவ்வாய்க்கிழமை நிதி ஒதுக்கீடு செய்தது. இதுதவிர சீனா வின் தேசிய வளர்ச்சி மற்றும் புனரமைப்பு ஆணையமும் நிதி ஒதுக்கியது.