வாஷிங்டன்: விரைவில் தொழில் தொடங்கும் திட்டத்தில் உள்ளதாக எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவன சிப்பினை தனது மூளையில் பொருத்திக் கொண்ட முதல் நபரான நோலண்ட் அர்பாக் கூறியுள்ளார்.
கடந்த 18 மாதங்களுக்கு முன்பு மூளையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், நியூராலிங்க் சிப் உதவியுடன் தனது அன்றாட வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்துள்ளார். உடல் அசைவில்லாமல் தன்னால் கணினி, ஏர் பியூரிபையர், தொலைக்காட்சி உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த முடிவதாக அவர் தெரிவித்துள்ளார். அரிசோனாவில் உள்ள சமுதாய கல்லூரியில் தற்போது அவர் கல்வி பயின்று வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2016-ல் நீச்சல் பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தை அடுத்த அவரது முதுகெலும்பு பாதிக்கப்பட்டது. அதன் பிறகு அவரது தோள்பட்டைக்கு கீழே உணர்வு மற்றும் இயக்கத்தை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“அறுவை சிகிச்சைக்கு முன்பாக எனது இரவு பொழுதை முழுவதும் தூங்காமல் செலவிட்டேன். பகல் முழுவதும் தூங்குவேன். யாரையும் நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அதனால் அப்படி இருந்தேன். உடல் அசைவின்றி இருந்த எனக்குள் ஏதேனும் நடக்கும் என்ற நம்பிக்கை மட்டும் உயிர்ப்போடு இருந்தது.
இப்போது அறுவை சிகிச்சைக்கு பின்பு என்னால் நிறைய விஷயங்களை சுயமாக செய்ய முடிகிறது. அதன் மூலம் எனது வாழ்வு முழுமை பெற்றுள்ளது. எனது பொழுதை அர்த்தமுள்ள வகையில் செலவிட முடிகிறது. இந்த சிகிச்சையை எதிர்கொண்ட முதல் நபர் என்பதில் எனக்கு பெருமை. ஏனெனில், இந்த முயற்சி வெற்றி பெற்றால் மகிழ்ச்சி. தோல்வி கண்டிருந்தால் அது என்னை போன்றவர்களுக்கு அடுத்த முறை நிச்சயம் உதவும் என்று நம்பினேன். மூளையில் எனக்கு சிப் பொருத்தியதும் அதை முழுமையாக என்னால் கன்ட்ரோல் செய்ய முடியவில்லை. அது குறித்து நாங்கள் பொதுவெளியில் சொல்லவில்லை. நியூராலிங்க் குழுவினர் பின்னர் அதை சரி செய்தனர்.
இப்போது என்னால் சுமார் 10 மணி நேரம் வரை கணினி உள்ளிட்ட சாதனத்தை பயன்படுத்த முடிகிறது. மரியோ கார்ட் கேம் விளையாடுகிறேன். தொழில் தொடங்கும் திட்டமும் உள்ளது. டெக்னிக்கலாக பார்த்தால் எனக்குள் சிப் பொருத்தப்பட்டுள்ளது. நான் Cyborg (எந்திரத்தின் உதவியால் ஆற்றல் பெற்ற மனிதர்) ஆக இருந்தாலும் இயல்பான மனிதரை போலவே உணர்கிறேன். இதோடு வாழ்வது வேடிக்கையானதும் கூட” என நோலண்ட் அர்பாக் தெரிவித்துள்ளார்.
நியூராலிங்க்: நியூராலிங்க் நிறுவனம் வடிவமைத்துள்ள எண்ணங்களை செயல்படுத்தும் வகையில் மூளைக்கும், கணினிக்குமான இன்டெர்ஃபேஸ் (BCI) இணைப்பை உருவாக்கும் வகையிலான ‘சிப்’-ஐ மனிதனின் மூளையில் பொருத்தி சோதனையை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குரங்குகளை வைத்து இந்த சோதனையை நியூராலிங்க் நிறுவனம் செய்திருந்தது.
இப்போது மனிதர்களுக்கு அதை பொருத்தி சோதனை மேற்கொண்டு வருகிறது. சோதனை அடிப்படையிலான இந்த ஆய்வுப் பணிகளை நியூராலிங்க் நிறுவனம் சுமார் 5 ஆண்டுகாலம் மேற்கொள்ளும் என சொல்லப்படுகிறது.