பவுத்த மதத் தலைவர் என்றவுடன் சாமானிய இந்தியர்களின் மனங்களில் சட்டென நினைவுக்கு வருபவராக திபெத்திய பவுத்த மதத் தலைவரான தலாய் லாமா இருக்கிறார். தீவிர சீன எதிர்ப்பாளரான அவர், இந்தியாவின் தர்மாசாலாவில் தஞ்சமடைந்திலிருந்தே எழுப்பும் திபெத் விடுதலைக்கான குரல் உலகெங்கும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆன்மிகம், அரசியல் என்று சமமாகப் பேசும் அவரது வீச்சு, அவர் மீதான ஊடக வெளிச்சம் எப்போதும் குறைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளும்.
அவரது ஆன்மிக சொற்பொழிவுகளைக் கேட்பதற்காக மட்டுமே பல்துறை பிரபலங்களும் தர்மசாலாவுக்கு விசிட் அடிப்பதும், அது ஊடக கவனத்துக்கு வருவதும் வழக்கம். சில நேரங்களில் சினிமா பிரபலங்கள் கூட தலாய் லாமாவை சந்திப்பது உண்டு. இப்படியான பிரபல முகமான தலாய் லாமா சுற்றிய பேச்சு இன்னும் அதிகமான வீச்சைக் கண்டுள்ளது. திபெத்திய புத்த மதத்தின் 14-வது தலாய் லாமாவாக இருக்கும் தற்போதைய தலைமையின் காலத்துக்குப் பின்னர் யார் அந்தப் பதவிக்கு வருவார்கள் என்பதே திடீர் வீச்சின் காரணமாக உள்ளது.
அதுவும், அவர் தனது 90-வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்ட அறிவிப்பில், “எனது மறைவுக்கு பிறகும் தலாய் லாமா மரபு தொடரும். அடுத்த தலாய் லாமாவை அங்கீகரிக்கும் அதிகாரம் காடன் போட்ராங் அறக்கட்டளைக்கு மட்டுமே உள்ளது” என்று கூறிய பின்னர் அடுத்த தலாய் லாமாவின் மீதான எதிர்பார்ப்பும், இவ்விவகாரத்தில் இந்தியா – சீனாவின் கருத்து மோதல்களும் கவனம் பெற்றுள்ளது. இதையும் தாண்டி ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது என்றால், அது தலாய் லாமா எப்படித் தேர்வு செய்யப்படுகிறார் என்பதே. இந்த நடைமுறை பல நூறு ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. மத நம்பிக்கைகள் மற்றும் மதச் சடங்குகள் சார்ந்ததாக இருக்கிறது. தலாய் லாமா எப்படி தேர்வு செய்யப்படுகிறார் என்று அறிவோம் வாருங்கள்:
எப்படி தேர்வு செய்யப்படுகிறார் தலாய் லாமா? – திபெத் பவுத்த மதத்தின்படி தலாய் லாமா என்பவர் பவுத்தத்தின் பெரிய பிரிவான மஹாயான பவுத்தத்தின் போதிசத்துவரான அவலோகிதேஸ்வரின் மறுபிறவியாக பாவிக்கப்படுகிறார். அவலோகிதேஸ்வர் சீனாவில் குவான்யின் என்று அறியப்படுகிறார். திபெத்தில் அவரை சென்ரெஸ்ஸிக் (Chenrezig) என்று அறியப்படுகிறார்.
பொதுவாகவே போதிசத்துவர்களானவர் உலகின் பிற உயிர்களின் துயரங்களைக் கேட்கும் இரக்க மனம் கொண்டவர்களாக இருக்கின்றனர். அத்தகைய போதிசத்துவரான அவலோகிதேஸ்வரின் மறுபிறவியாக திபெத் தலாய் லாமா கருதப்படுகிறார். அவலோகிதேஸ்வர் அல்லது சென்ரெஸ்ஸிக் அல்லது குவானியின் ஓர் ஆண் வடிவமாகத் தான் இருக்கிறார். அந்தச் சிலைகள் எல்லாம் பல கைகள், தலைகள் கொண்டதாகவே இருக்கின்றன. இந்த உலக உயிர்களின் பல்வேறு தேவைகளுக்கும் உதவிக்கரம் நீட்டுவதற்காக இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தலாய் லாமா, மீண்டும் மீண்டும் மறுபிறவி எடுக்கிறார் என்பதே திபெத்திய பவுத்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை.
புதிய தலாய் லாமாவின் மறுபிறவிக்கான தேர்வு, நடப்பு தலாய் லாமா மறைவுக்குப் பிந்தைய சில துக்க நாட்கள் முடிந்த பின்னர் தொடங்குகிறது. லாமாக்கள் எனப்படும் உயர்நிலை மதகுருக்கள் கூடி புதிய தலாய் லாமாவை தேர்வு செய்யும் பணியில் இறங்குகின்றனர். உயிரிழந்த தலாய் லாமா சிதையிலிருந்து கிளம்பும் புகை எந்தத் திசையில் செல்கிறது என்பதை முதலில் உறுதி செய்கின்றனர். மேலும், தலாய் லாமா மறையும் போது எந்தத் திசையில் அவரது பார்வை போகிறது என்பதையும் கருத்தில் கொள்கின்றனர்.
இது மட்டுமல்லாது திபெத்தின் புனித ஏரியாகக் கருதப்படும் லாமோ லா-ஸோ ஏரியிலும் சில சமிக்ஞைகளை தேடுகின்றனர். இந்த ஏரியின் நீரோட்டத்தில் ஏற்படும் சலனம், தலாய் லாமா மறுபிறவியைத் தேடுவோருக்கு வழிகாட்டும் என்று நம்பப்படுகிறது. பெரும்பாலும் தலாய் லாமாக்கள் திபெத்தில் பிறந்தவர்களாகவே இருந்துள்ளனர். விதிவிலக்காக ஒருவர் மங்கோலியாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார். இன்னொருவர் தற்போது வடகிழக்கு இந்தியாவில் உள்ள பிராந்தியத்தில் கண்டுபிடிக்கப்பட்டார்.
இவ்வாறு அறிகுறிகள், சமிக்ஞைகள் மூலம் அடுத்த தலாய் லாமாவை கண்டுபிடிக்கின்றனர். பொதுவாக புதிய தலாய் லாமா ஒரு சிறுவனாகவே இருக்கிறார். புதிய தலாய் லாமாவை கண்டறிவதுடன் எல்லாம் முடிவடைந்து விடுவதில்லை. அவ்வாறாக தேர்வு செய்யப்படும் புதிய தலாய் லாமா தீவிர பரிசோதனைகளுக்கு உட்படுத்துகின்றனர். அந்தச் சோதனைகள் மூலமே தாங்கள் கண்டறிந்தது தலாய் லாமாவின் பரிந்துரை என்று உறுதி செய்கின்றனர்.
புதிய தலாய் லாமா தேர்வு செய்யப்பட்ட பின்னர், அச்சிறுவன் பவுத்த தத்துவங்கள் சார்ந்து கடுமையான பயிற்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பவுத்த தத்துவங்களை கற்று அறிவதோடு, தலாய் லாமாவின் பொறுப்புகள் என்னவென்பதையும் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அதுமட்டுமல்லாது தலாய் லாமா என்பவர் திபெத்திய பவுத்தர்களின் மதகுருவாக, வரலாற்றுத் தலைவராக, அரசியல் தலைவராக இருக்க வேண்டியதாகிறது.
இதுவரை, புதிய தலாய் லாமாவாக தேர்வாகிய சிறுவர்கள், முந்தைய தலாய் லாமா இறப்புக்கு வெகு சில காலத்துக்கு முன்னர் பிறந்தவராகவே இருந்திருக்கிறார். இந்த நிலையில் தான் தற்போதைய தலாய் லாமா பாரம்பரியங்கள், நம்பிக்கைகள், சடங்குகள் எல்லாவற்றுக்கும் மாறாக ஏன் ஒரு பெண் அடுத்த தலாய் லாமாவாக இருக்கக் கூடாது என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். இது விவாதப் பொருளாகியுள்ளது.
ஆணோ / பெண்ணோ தலாய் லாமாவை திபெத்திய பவுத்தர்களே தேர்வு செய்யும் நிலையில், “தலாய் லாமா உள்ளிட்ட பவுத்த தலைவர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளுக்கு எங்களின் ஒப்புதலும் அங்கீகாரமும் அவசியம்” என தெரிவித்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது சீனா. இத்தகையச் சூழலில் அடுத்த தலாய்லாமா தேர்வு பாரம்பரிய மதச் சடங்குகளுக்கு மத்தியில், அரசியலுக்கும் இடையே சிக்கிக் கொண்டுள்ளது.