வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உடனான சந்திப்பை அடுத்து, வரும் திங்கள்கிழமை உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கியை, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சந்திக்க உள்ளார்.
இது தொடர்பாக ட்ரம்ப் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “அலாஸ்காவில் நிகழ்ந்த சந்திப்பு சிறப்பானது, வெற்றிகரமானது. ரஷ்ய அதிபர் விளாடிதிர் புதினுடனான சந்திப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, மிகுந்த மதிப்புக்குரிய நேடோ பொதுச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய தலைவர்களுடன் நேற்றிரவு தொலைபேசியில் பேசினேன்.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான கொடூரமான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சிறந்த வழி, நேரடியாக அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதுதான் என்று அனைவராலும் தீர்மானிக்கப்பட்டது. இது போரை (தற்காலிகமாக) முடிவுக்குக் கொண்டு வரும் வெறும் போர் நிறுத்த ஒப்பந்தம் அல்ல. அவ்வாறு ஒன்று நடந்தால் அது நிலைக்காது. அதிபர் ஜெலன்ஸ்கி திங்கள்கிழமை மதியம் வெள்ளை மாளிகைக்கு வருவார். அனைத்தும் சரியாக நடந்தால், நாங்கள் ரஷ்ய அதிபர் புதினுடன் ஒரு சந்திப்புக்கு திட்டமிடுவோம். இது நிகழ்ந்தால் பல லட்சக்கணக்கான மக்களின் உயிர்கள் காப்பாற்றப்படும்” என தெரிவித்துள்ளார்.
அலாஸ்கா சந்திப்பு: முன்னதாக, அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம், ஆங்கரேஜ் நகரில் உள்ள ராணுவ தளத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – ரஷ்ய அதிபர் புதின் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. புதினுக்கு அமெரிக்க அரசு சார்பில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்ய தரப்பில் அதிபர் புதின் உடன் வெளியுறவு அமைச்சர் செர்கே லாரவ், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆண்ட்ரே பெலோசோவ், நிதியமைச்சர் அண்டன் சிலுன்னோவ் மற்றும் 2 மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்தச் சந்திப்பின்போது அமெரிக்க – ரஷ்ய உறவு, உக்ரைன் போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் ட்ரம்ப் – புதின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய புதின், “நமது இரு நாடுகளும் பொதுவான எதிரிகளுடன் எவ்வாறு போராட்டன என்பதை எப்போதும் நினைவில் கொள்வோம். இந்த பாரம்பரியம் எதிர்காலத்தில் நமக்கு உதவும். உக்ரைனின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்ற ட்ரம்ப்பின் கூற்றுடன் நான் உடன்படுகிறேன். பரஸ்பர ஒப்பந்தம் உக்ரைனின் அமைதியைக் கொண்டுவரும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “புதின் உடனான இந்தச் சந்திப்பு ஆக்கபூர்வமாக அமைந்தது. ஆனால் 3 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் உக்ரைன் போர் நிறுத்த விவகாரம் தொடர்பாக எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை” என்று தெரிவித்தார். மேலும் ட்ரம்ப் கூறும்போது, “இப்போது இதைச் செய்து முடிப்பது உண்மையில் ஜெலென்ஸ்கியின் பொறுப்பாகும். ஐரோப்பிய நாடுகளும் இதில் கொஞ்சம் தலையிட வேண்டும் என்று நான் கூறுவேன், ஆனால், இது முழுக்க அதிபர் ஜெலென்ஸ்கியின் பொறுப்பாகும்” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.