வாஷிங்டன்: பிரேசில் நாட்டுக்கு 50% வரி விதிப்பதாகவும், இலங்கை, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 7 நாடுகளுக்கு 30 சதவீதம் வரை வரி விதிக்கப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து 8 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிகாரபூர்வ கடிதங்கள் எழுதியுள்ளார். இந்த நாடுகள் மீதான அனைத்து புதிய வரிகளும் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதன்படி பிரேசில் நாட்டுக்கு 50 சதவீதம் வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். மேலும், அல்ஜீரியா, ஈராக், லிபியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு 30% வரியும்; புருனே மற்றும் மால்டோவா நாடுகள் மீது 25% வரியும்; பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு 20% வரியும் விதிக்கப்படுவதாக ட்ரம்ப் அறிவித்தார்.
‘நியாயமற்ற வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை’ சரிசெய்யும் முயற்சியாக இந்த வரிவிதிப்பு இருக்கும் என ட்ரம்ப் தெரிவித்தார். பிரேசில் நாட்டின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ மீது வழக்குத் தொடரப்பட்டதற்கு பதிலடியாக, அந்நாட்டின் மீது 50% வரி விதிக்கப்பட்டதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஆதரவாளரான பிரேசில் முன்னாள் அதிபர் பொல்சனாரோ, கடந்த அதிபர் தேர்தலின்போது மோசடி செய்து ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முயன்றதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையை கைவிட வேண்டும் என தற்போதைய அதிபர் லூயிஸ் இனாசியா லூலா டி சில்வாவுக்கு டொனால்டு ட்ரம்ப் கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து இந்த புதிய வரிவிதிப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லூலாவின் எதிர்வினை: ட்ரம்பின் 50 சதவீத வரிவிதிப்பு குறித்து லூலா டி சில்வா வெளியிட்ட எக்ஸ் பதிவில், “பிரேசில் இறையாண்மை கொண்ட நாடு, சுயாட்சி கொண்ட நாடு. எனவே நாங்கள் வெளியில் இருந்து வரும் எந்தவொரு அச்சுறுத்தலையும் ஏற்கமாட்டோம். ஆட்சிக் கவிழ்ப்பைத் திட்டமிடுவதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிரான நீதித்துறை நடவடிக்கைகள், பிரேசில் நீதித்துறையின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை. எனவே, இந்த அமைப்புகள் எந்தவொரு அச்சுறுத்தல்களுக்கும் உட்பட்டது அல்ல.
பிரேசில் உடனான அமெரிக்காவின் வர்த்தக உறவில் ஏற்றத்தாழ்வுகள் இருந்ததாக தெரிவிப்பது தவறானது. கடந்த 15 ஆண்டுகளில், பிரேசில் உடன் அமெரிக்கா 410 பில்லியன் டாலர்கள் வணிகம் செய்துள்ளது என்று அமெரிக்காவின் தரவுகள் காட்டுகின்றன. அமெரிக்கா எங்கள் மீது புதிய வரிகளை விதித்தால், பிரேசில் அதற்கான பதிலடியை பிரேசிலின் பொருளாதார சட்டம் மூலம் கொடுக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்