தியான்ஜின்: பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் சமூகப் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கும் “பாரபட்சமான தடைகளுக்கு” எதிராக ரஷ்யாவும் சீனாவும் பொதுவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறினார். பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு 10% வரி விதிக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அச்சுறுத்திய நிலையில், புதின் இக்கருத்தை கூறியுள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு (SCO) உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள தியான்ஜினுக்கு வந்த ரஷ்ய அதிபர் புதின், சீன அரசின் சின்ஹுவா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “ முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு கூடுதல் வளங்களைத் திரட்டுவதில் ரஷ்யாவும் சீனாவும் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றன. உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள பிரிக்ஸ் அமைப்பின் திறனை வலுப்படுத்துவதில் ஒன்றுபட்டு நிற்கிறோம்.
பிரிக்ஸ் உறுப்பினர்கள் மற்றும் உலகின் சமூகப் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கும் பாரபட்சமான தடைகளுக்கு எதிராக சீனாவும், ரஷ்யாவும் பொதுவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன.
ரஷ்யாவும், சீனாவும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியில் சீர்திருத்தம் செய்வதை ஆதரிக்கிறது. வெளிப்படைத்தன்மை மற்றும் உண்மையான சமத்துவம் என்ற கொள்கைகளின் அடிப்படையில் ஒரு புதிய நிதி அமைப்பு கட்டமைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை இரு நாடுகளும் ஆதரிக்கிறோம். இது அனைத்து நாடுகளுக்கும் சமமான மற்றும் பாகுபாடற்ற சேவையை வழங்க முடியும். மேலும், இது உலகப் பொருளாதாரத்தில் உறுப்பு நாடுகளின் உண்மையான நிலையை பிரதிபலிக்கும்.
மனிதகுலம் அனைத்தின் நலனுக்காகவும் நாங்கள் முன்னேற்றத்தையே விரும்புகிறோம். இந்த உன்னத இலக்கை நோக்கி ரஷ்யாவும் சீனாவும் தொடர்ந்து இணைந்து செயல்படும். இரு நாடுகளின் செழிப்பை உறுதி செய்வதற்கான முயற்சிகளை ஒருங்கிணைப்போம் என்றும் நான் நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.
பிரிக்ஸ் என்பது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்காவை உள்ளடக்கிய ஒரு அமைப்பாகும். சவுதி அரேபியா, ஈரான், எத்தியோப்பியா, எகிப்து, அர்ஜென்டினா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை பிரிக்ஸில் புதிய உறுப்பினர்களாக இணைந்துள்ளன.