லண்டன்: அரசுமுறை பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, லண்டனில் அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்தார். அப்போது, அவர்களது முன்னிலையில் இரு நாடுகள் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக கடந்த 23-ம் தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்றார். அங்கு அந்த நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை நேற்று சந்தித்து பேசினார். அப்போது, இரு நாடுகள் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர், இரு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் கூறியதாவது:
பிரதமர் மோடி: இது வரலாற்று சிறப்புமிக்க தினம். நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு. தற்போது இந்தியா – இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்மூலம் இரு நாடுகள் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு அதிகரிக்கும். இந்தியாவில் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் வளர்ச்சி அடையும். இந்திய இளைஞர்கள், விவசாயிகள் பயனடைவார்கள். இரு நாடுகளிலும் எளிதாக வணிகம் தொடங்கு வதற்கு ஏற்ற சூழல் உருவாகும்.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவின் குருகிராமில் சவுத்ஆம்டன் பல்கலைக்கழகத்தின் கிளை கடந்த வாரம் தொடங்கப்பட்டது. இங்கிலாந்தின் 6 பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்கள் வளாகங்களை தொடங்க உள்ளன. இங்கிலாந்தில் இந்திய வேளாண் விளை பொருட்கள், உணவு வகைகள், ஜவுளி ரகங்கள், காலணிகள், நகைகள், வைரங்கள், கடல் உணவுகள், இன்ஜினீயரிங் பொருட்களும், இந்தியாவில் இங்கிலாந்தின் மருத்துவ உபகரணங்கள், விமான உதிரி பாகங்களும் குறைந்த விலைக்கு கிடைக்கும்.
தொழில்நுட்பம், பாதுகாப்பு, சுற்றுச்சூழல், கல்வி, செயற்கை நுண்ணறிவு (ஏஐ), செமி கண்டக்டர், சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த இங்கிலாந்து பிரதமர் ஸ்மார்மருக்கு நன்றி. தீவிரவாதத்துக்கு எதிரான போரில் ஒருபோதும் இரட்டை நிலைப்பாடு இருக்க கூடாது. ரஷ்யா – உக்ரைன் போருக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். மத்திய கிழக்கில் நிலவும் குழப்பங்களுக்கு சுமுக தீர்வு காணப்பட வேண்டும்.
இந்தியா – இங்கிலாந்து இடையே முக்கிய உறவு பாலமாக கிரிக்கெட் திகழ்கிறது. இரு நாட்டு மக்களும் இதை பெரிதும் நேசிக்கின்றனர். அரசுமுறை பயணமாக இந்தியா வருமாறு இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மருக்கு அழைப்பு விடுக்கிறேன்.
இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர்: இந்தியா, இங்கிலாந்து இணைந்து, 2035-ம் ஆண்டில் எட்டுவதற்கான புதிய லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளோம். தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இருநாடுகள் இடையே வணிகம் அதிகரிக்கும், வர்த்தக உறவுகள் எளிதாகும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். சொகுசு கார்கள், மின்னணு சாதனங்கள், மருத்துவ உபகரணங்கள் உட்பட பல்வேறு பொருட்களின் விலை குறையும். மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும். இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு இந்திய அரசு தற்போது விதிக்கும் 15% வரி, 3% ஆக குறையும். இவ்வாறு அவர்கள் பேசினர்.
லண்டனில் இருந்து 64 கி.மீ. தொலைவில் சில்டர்ன் மலை அடிவாரத்தில் உள்ள தனது பிரம்மாண்டமான பண்ணை வீட்டில் பிரதமர் மோடிக்கு இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் நேற்று இரவு விருந்து அளித்தார். இந்த பயணத்தின்போது இங்கிலாந்து மன்னர் சார்லஸையும் பிரதமர் மோடி சந்தித்தார்.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து இங்கிலாந்துடன் கடந்த 2022 முதல் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.கடந்த பிப்ரவரியில் மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் லண்டன் சென்ற போது ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மோடியின் பயணத்தின் போது கையெழுத்தாகி உள்ளது.
இந்த ஒப்பந்தத்தால் இந்திய நகைகள், வைரங்கள், மருந்துகள், தேநீர், அரிசி, ரசாயன பொருட்கள் மீதான இறக்குமதி வரியை இங்கிலாந்து அரசு கணிசமாக குறைக்கும். இங்கிலாந்தின் சொகுசு கார்கள், மதுபானங்கள், மின்னணு சாதனங்கள், மருத்துவ உபகரணங்கள், விமான உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரியை இந்திய அரசு கணிசமாக குறைக்கும். இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் சொகுசு கார்களின் விலை இந்தியாவில் 30% வரை குறையும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
சில்டர்ன் மலை அடிவாரத்தில் உள்ள தனது செக்கர்ஸ் பண்ணை வீட்டில் இரவு விருந்துக்காக பிரதமர் மோடியை வரவேற்ற இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்.