புதுடெல்லி: பாகிஸ்தான் – சவுதி பாதுகாப்பு ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து ஆய்வு செய்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் – சவுதி அரேபியா நாடுகளுக்கு இடையே மிக முக்கியமான பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று நேற்று (புதன்கிழமை) கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் (Saudi-Pakistan mutual defence pact) என அழைக்கப்படுகிறது. இது இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதாவது, இந்த ஒப்பந்தத்தின் மூலம் பாகிஸ்தான் மீதான எந்தவொரு தாக்குதலும் சவுதி அரேபியா மீதான தாக்குதலாக எடுத்துக் கொள்ளப்படும். அதேபோல் சவுதி அரேபியா மீதான எந்தவொரு தாக்குதலும் பாகிஸ்தான் மீதான தாக்குதலாக எடுத்து கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த ஒப்பந்தம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சவுதி அரேபியா – பாகிஸ்தான் இடையே முக்கிய பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானதாக செய்திகள் வந்துள்ளன. அதை நாங்களும் பார்த்தோம். இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக இந்த ஒப்பந்தத்தை முறைப்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வந்தது.
இந்த ஒப்பந்தத்தால் நமது நாட்டின் பாதுகாப்புக்கும், பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கும் எவ்வாறு தாக்கம் ஏற்படும் என்பதை ஆய்வு செய்வோம். நாட்டின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதிலும், அனைத்து களங்களிலும் விரிவான தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதிலும் மத்திய அரசு உறுதியாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.