ஆப்கானிஸ்தான் நீர்வளம், எரிசக்தி துறை செய்தித் தொடர்பாளர் மதியுல்லா அபித் கூறியதாவது: குனார் நதியில் புதிய அணையை கட்ட திட்டமிட்டு உள்ளோம். இதற்கான களஆய்வு நடத்தப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய அணையின் மூலம் ஆப்கானிஸ்தானில் 1,50,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். மேலும் 45 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படும். இந்த அணையால் நாட்டின் உணவு தானிய உற்பத்தி, மின் உற்பத்தி கணிசமாக அதிகரிக்கும்.
குனார் நதி தொடர்பாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இடையே எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை. எனவே எவ்வித பிரச்சினையும் இன்றி நதியில் பிரம்மாண்ட அணையை கட்டுவோம். பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீர் தடுத்து நிறுத்தப்படும். இவ்வாறு மதியுல்லா அபித் தெரிவித்துள்ளார்.

