இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் குடும்பத்தினரின் விருப்பத்தை மீறி காதல் திருமணம் செய்த தம்பதியை ஆணவக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த இளம் ஜோடி தங்களது வீட்டாரின் எதிர்ப்புகளை மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர். இதுதொடர்பாக அந்த பெண்ணின் சகோதரர் பழங்குடியினத் தலைவரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் அந்த காதல் ஜோடி ஆணவக்கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக அந்த ஜோடியை டிரக்கில் குவெட்டாவின் பாலைவனப் பகுதிக்கு தூக்கிச் சென்ற ஒரு கும்பல் கொடூரமாக சுட்டுக் கொல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக 14 பேரை போலீஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். இதில், ஆணவக்கொலைக்கு உத்தரவிட்ட உள்ளூர் பழங்குடியினத் தலைவர் ஷேர் பாஸ் சதசாயும் அடங்குவார்.
யாரும் தப்ப முடியாது: பலுசிஸ்தான் முதல்வர் சர்ப்ராஸ் புக்தி கூறுகையில், “ஒருவரை சுட்டுக்கொன்று அதனை வீடியோவில் பதிவு செய்வது மனிதத் தன்மையற்ற செயல். ஒரு உயிரை எடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. இது, ஒரு வேதனையான, அருவருப்பான நிகழ்வு. இது ஒரு கொலைக் குற்றம். சம்பந்தப்பட்ட அனைவரும் கடுமையாக தண்டிக்கப்படுவதை அரசு உறுதி செய்யும்” என்றார்.