இஸ்லாமாபாத்: சீனா – பாகிஸ்தான் இடையேயான பொருளாதார வழித்தடத்தின் முக்கிய திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்கும் முடிவை சீனா கைவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த திட்டங்களை நிறைவேற்ற ஆசிய வளர்ச்சி வங்கியை பாகிஸ்தான் நாடியுள்ளது.
சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டம் (CPEC) இரு நாடுகளுக்கும் இடையேயான மிக முக்கிய மிகப் பெரிய பொருளாதார திட்டமாகக் கருதப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், பாகிஸ்தானின் ரயில், துறைமுக கட்டமைப்பு வளர்ச்சிக்கு சீனா நிதி உதவி அளிக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதன்படி, சில திட்டங்களுக்கு சீனா நிதி உதவி அளித்தது. எனினும், அந்த நிதி உதவி முறைப்படி பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டை சீனா முன்வைத்தது.
இந்நிலையில், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டம் 2-ன் கீழ் பாகிஸ்தானின் கராச்சி – ரோஹிரி இடையேயான 2 பில்லியன் டாலர் (பாகிஸ்தான் மதிப்பில் ரூ. 17 லட்சம் கோடி) மதிப்பிலான திட்டத்தில் இருந்து விலகுவதாக சீனா அறிவித்துள்ளது. சமீபத்தில் சீனா சென்ற பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இத்திட்டம் தொடர்பாக சீன தரப்புடன் ஆலோசனை மேற்கொண்டதாகவும் எனினும் இத்திட்டத்தில் இருந்து விலகுவதாக சீனா தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்த திட்டத்துக்கான நிதி உதவியைப் பெற பாகிஸ்தான், ஆசிய வளர்ச்சி வங்கியை அணுகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திட்டத்தில் இருந்து சீனா பின்வாங்கி இருப்பதன் மூலம், பாகிஸ்தானில் பெரிய முதலீடுகளை மேற்கொள்ள அந்நாடு ஆர்வம் காட்டவில்லை என தெரிகிறது. பாகிஸ்தானின் அதிகரித்து வரும் கடன் சுமை காரணமாகவும், திருப்பிச் செலுத்தும் அதன் திறன் குறைந்து வருவதன் காரணமாகவும் சீனா இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கராச்சி – ரோஹிரி ரயில் திட்டத்துக்கு ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து பாகிஸ்தான் கடன் பெற சீனா ஒப்புதல் வழங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் தனது நிதி தேவைக்கு சர்வதேச நாணய நிதியத்தை பெருமளவில் நம்பி இருப்பதாலும், ஏற்கனவே சீன மின்சார நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை அந்நாடு திருப்பிச் செலுத்த முடியாமல் தவிப்பதாலும் சீனா தனது முதலீட்டு முடிவுகளை திரும்பப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.