இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான டிஆர்எப் பிரிவை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பு என அமெரிக்க அறிவித்தது அமெரிக்க அரசு. இதனை இந்தியா வரவேற்றது. இதற்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு பகிர்ந்துள்ள தகவல் குறித்து பார்ப்போம். ”பஹல்காம் தாக்குதலுக்கும் லஷ்கர்-இ-தொய்பாவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அந்த அமைப்பு பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட மற்றும் செயலிழந்த அமைப்பு ஆகும். அந்த பணியை பாகிஸ்தான் அரசு கவனமாக செய்துள்ளது.
சம்பந்தப்பட்ட அமைப்பின் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அதன் உறுப்பினர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் தீவிரவாதத்தை எதிர்க்கின்ற நாடுகளில் உலகளவில் முன்னணியில் உள்ளது. உலக அமைதிக்காக தீவிரவாத தடுப்பு நடவடிக்கையை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலில் லஷ்கருக்கு பங்கு உள்ளதாக சொல்லும் இந்தியாவிடம் ஆதாரம் ஏதுமில்லை. உலக அளவில் பாகிஸ்தானுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில் இந்தியா செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வசித்து வரும் மக்களின் வாழ்வியல் நிலை சார்ந்த கவனத்தை இந்தியா திசை திருப்ப பார்க்கிறது” என கூறியுள்ளது.
அமெரிக்கா சொல்லியுள்ளது என்ன? – அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம், தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எப்) அமைப்பை ஒரு வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாகவும்(எப்டிஓ), நியமிக்கப்பட்ட உலகளாவிய தீவிரவாத அமைப்பாகவும் (எஸ்டிஜிடி) அறிவிக்கிறது. தீவிரவாதத்தை ஒடுக்குவதிலும், பஹல்காம் தாக்குதலுக்கு நீதி கேட்டும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் விடுத்த அழைப்பைச் செயல்படுத்துவதிலும் அமெரிக்க நிர்வாகம் உறுதியாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எப்) அமைப்பை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளதற்கு இந்தியா பாராட்டு தெரிவித்துள்ளது.
சீனா கருத்து: தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையை மேம்படுத்தவும், பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை கூட்டாகப் பராமரிக்கவும் பிராந்திய நாடுகளுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.