நியூயார்க்: இறக்குமதி வரிகளின் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும் என்று ஐநா பொதுச்சபைக் கூட்டத்துக்கு இடையே நடைபெற்ற கூட்டம் ஒன்றில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில் தான் ஆற்றிய உரை தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஜெய்சங்கர், “உலகம் பன்முகத்தன்மை நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்நிலையில், பிரிக்ஸ் நாடுகள் ஆக்கப்பூர்வமான மாற்றத்துக்கான வலுவான குரலாக உள்ளன.
உலகம் கொந்தளிப்பாக இருக்கிறது. இந்த தருணத்தில், அமைதியை கட்டமைத்தல், உரையாடல், ராஜதந்திரம், சர்வதேச சட்டத்தை கடைப்பிடிப்பது ஆகியவற்றுக்கு பிரிக்ஸ் நாடுகள் மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
ஐநா சபையின் முக்கிய அங்கமாக உள்ள ஐநா பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தப்படுவதற்கு பிரிக்ஸ் நாடுகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுக்க வேண்டும்.
பாதுகாப்பு வாதம், இறக்குமதி வரி ஏற்ற இறக்கம், வரி அல்லாத தடைகள் போன்றவை வர்த்தக ஓட்டங்களை பாதிக்கின்றன. எனவே, பலதரப்பு வர்த்தக அமைப்பை பிரிக்ஸ் பாதுகாக்க வேண்டும்.
தொழில்நுட்பமும் புதுமையும் பிரிக்ஸ் ஒத்துழைப்பின் அடுத்த கட்டத்தை வரையறுக்கும். உணவு பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, காலநிலை மாற்றம், டிஜிட்டல் மாற்றம், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், புதுமை ஆகியவற்றில் இந்தியா கவனம் செலுத்தும்.” என தெரிவித்துள்ளார்.