மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தன்னை பதவி நீக்கம் செய்த சில மணி நேரங்களில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் அந்நாட்டின் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் ரோமன் ஸ்டாரோவோயிட். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் புறநகர்ப் பகுதியில் காரில் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டதாக ரஷ்ய செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள குர்ஸ்க் பிராந்தியத்தின் ஆளுநராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய ரோமன் கடந்த ஆண்டு மே மாதம் ரஷ்யாவின் போக்குவரத்துத் துறை அமைச்சராக புதினால் நியமிக்கப்பட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, உக்ரைன் ட்ரோன் தாக்குதல் தொடர்பான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக ரஷ்ய விமான நிலையங்களில் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட விமானங்கள் தரையிறக்கப்பட்டன. அத்துடன் உஸ்ட்-லுகா துறைமுகத்தில் டேங்கர் கப்பல் ஒன்று வெடித்துச் சிதறியதில் அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாகவே போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ரோமன் நீக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் பதவி நீக்கத்துக்கான காரணம் எதையும் ரஷ்ய அரசு வெளியிடவில்லை.
கடந்த சில மாதங்களாகவே ரோமன் குர்ஸ்க் ஆளுநராக இருந்தபோது அப்பகுதியில் நடந்த ஊழல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் அவர் மீது வைக்கப்பட்டதால் அவரது அமைச்சர் பதவி எப்போதும் வேண்டுமானாலும் பறிக்கப்படலாம் என்று சூழல் நிலவி வந்ததாக கூறப்படுகிறது.
தற்போது நோவ்கோரோட் ஆளுநராக இருந்த ஆண்ட்ரே நிகிடின் புதிய போக்குவரத்துத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆண்ட்றே நிகிடினின் தொழில்முறை அனுபவம், போக்குவரத்துத் துறைக்கு சிறந்த பங்களிப்பை வழங்கும் என்று அதிபர் புதின் நம்புவதாக ரஷ்ய அரசின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.