மேற்கு ஆப்பிரிக்கா நாடான நைஜரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் கொல்லப்பட்டனர், ஒருவர் கடத்தப்பட்டார் என்று அந்த நாட்டின் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
நைஜர் நாட்டின் தலைநகர் நியாமியில் இருந்து சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தென்மேற்கு நகரமான டோசோவில் ஒரு கட்டுமானத் தளத்தில் காவலுக்கு இருந்த ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 இந்தியர்கள் கொல்லப்பட்டனர், ஒருவர் கடத்தப்பட்டார்.
“ஜூலை 15 அன்று நைஜரின் டோசோ பகுதியில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில், இரண்டு இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர், ஒருவர் கடத்தப்பட்டார்.” என்று அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்தது. கொல்லப்பட்டவர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
அதேபோல, கடத்தப்பட்ட இந்தியரை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், நைஜர் நாட்டில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக எச்சரிக்கையுடன் இருக்குமாறும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.