காத்மாண்டு: நேபாளத்தில் அரசுக்கு எதிராக வெடித்த கலவரத்தால் பதற்றம் நீடிக்கும் நிலையில், அரசியல்வாதிகளை குறிவைத்து தாக்குதல்கள் நடக்கின்றன. அங்குள்ள வணிக வளாகங்களை இளைஞர்கள் கும்பலாகச் சென்று கொள்ளையடித்து வருகின்றனர். பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது தொடர்பாக இதுவரை 26 பேரை ராணுவம் கைது செய்துள்ளது.
2008-ல் அண்டை நாடான நேபாளத்தில் மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, கம்யூனிஸ்ட் அரசு ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. இந்நிலையில், நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தால் நேபாளத்தில் அரசியல் நெருக்கடி உச்சத்தை எட்டியுள்ளது.
நேபாள நாட்டைச் சேர்ந்த ஜென் இசட் இளைஞர்கள் நடத்திய தீவிர போராட்டங்களால் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் (73) கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்தது. அவருடன் சேர்ந்து, நாட்டின் அதிபராக இருந்த ராம்சந்திர பவுடேலும் ராஜினாமா செய்தார். இதனால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. நேபாளத்தில் நிலவி வரும் அரசியல் பதற்றமான சூழ்நிலை காரணமாக சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மேலும், நாட்டின் தலைநகர் காத்மாண்டு உட்பட பல்வேறு பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்கின்றனர். சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதைப் பயன்படுத்தி வன்முறை கும்பல்களைச் சேர்ந்த இளைஞர்கள் நேபாள நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள வணிக வளாகங்களுக்குள் புகுந்து, டிவி, ஏசி, வாஷிங்மெஷின், மிக்ஸி, குளிர்சாதனப் பெட்டிகள் உள்ளிட்ட பொருட்களைக் கொள்ளையடித்து வருகின்றனர். மேலும், நகரங்களில் உள்ள பொதுச் சொத்துகளுக்கும் அவர்கள் சேதம் விளைவித்தனர்.
இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள ராணுவம் எச்சரித்தது.தொடர்ந்து, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்த வகையில் 26 பேரை ராணுவம் நேற்று கைது செய்துள்ளது. தலைநகர் காத்மாண்டுவில் கைது செய்யப்பட்ட அவர்களை நேபாள ராணுவத்தினர் சிறையில் அடைத்துள்ளனர். கைதான 26 பேரும் காத்மாண்டு, பக்தபூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
மாளிகை தீக்கிரை: இதனிடையே, காத்மாண்டுவில் உள்ள சிங்கா அரண்மனை எனப்படும் பிரமாண்டமான அரசு மாளிகை, இளைஞர்கள் வைத்த தீயின் காரணமாக கருகியது. அதில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள், ஆவணங்கள் அனைத்தும் நாசமாகின.
நேபாளத்தில் அமைதி திரும்பாத நிலையில், பல்வேறு நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. காத்மாண்டு முழுவதும் போலீஸா
ரும், ராணுவத்தினரும் குவிக்கப்பட்டு, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேபாளத்தில் நிலவும் அசாதாரண சூழலைத் தொடர்ந்து, காத்மாண்டு சர்வதேச விமான நிலையம் மறுஅறிவிப்பு வரும்வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நேபாளத்துக்கு சுற்றுலா மற்றும் பல்வேறு காரணங்களுக்காக பயணம் மேற்கொண்ட வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள், தங்களின் நாடுகளுக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தில் இளைஞர்கள் ஒன்று திரண்டு அதிபர், பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்டோரின் வீடுகளை குறிவைத்து தாக்கி வருகின்றனர். பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு ஹெலிகாப்டரில் தப்பிச் சென்றுள்ளார்.
முன்னாள் பிரதமர்கள் பிரசண்டா, ஷெர் பகதூர் தேவ்பா, சாலாநாத் கனால், அமைச்சர்கள், மூத்த அரசியல் தலைவர்களின் வீடுகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதில் ஷெர் பகதூர் தேவ்பா மற்றும் அவரது மனைவி ஆகியோர் காயங்களுடன் தப்பினர். முன்னாள் பிரதமர் சாலாநாத்கனாலின் மனைவி ராஜலட்சுமி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.
நேபாள வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த டாக்டர் அர்சு ராணா தேபா (63) கடந்த 4-ம் தேதி அமெரிக்க அரசு வழங்கிய 2 விமானங்களை, ராணுவத்தின் மீட்பு நடவடிக்கைகளுக்கு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவரது வீட்டுக்குள் போராட்டக்காரர்கள் புகுந்து தாக்குல் நடத்தினர். இதில் அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. அவர் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது இருந்த போட்டோவும், தாக்குதலுக்குப் பின்னர் ரத்த காயத்துடன் இருக்கும் போட்டோவும் தற்போது வெளியாகியுள்ளது.
பொதுமக்களுக்கு வேண்டுகோள்: அதிபர் ராம் சந்திரபால் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை சந்தித்து பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முன்வந்துள்ளார். நாட்டின் பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தாமல், அமைதியான முறையில் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்று அவர் நேபாள மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இடைக்கால பிரதமர் சுசீலா கார்கி? – நேபாளத்தில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் பிரதிநிதியினரை, உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் செயலர் நேற்று சந்தித்துப் பேசினார். 4 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, சுசீலா கார்கியை, இடைக்கால பிரதமராக நியமிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்ததாக பார் அசோசியேஷன் செயலர் தெரிவித்தார். எனவே, நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி விரைவில் நியமிக்கப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. சுசீலா கார்க்கி, நேபாளத்திலுள்ள பிராட் நகரில் 1952-ல் பிறந்தார். இவர் தனது முதுநிலை படிப்பை இந்தியாவின் உ.பி. மாநிலம் வாராணசியிலுள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார். அதன் பின்னர் நேபாளத்தின் திரிபுவன் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை படித்துள்ளார்.