காத்மண்டு: நேபாளத்தின் இடைக்கால பிரதமராக அந்நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
நேபாளத்தில் ‘ஜென் ஸீ’ இளைஞர்கள் நடத்திய தீவிர போராட்டங்களால் பிரதமர் கே.பி.சர்மா ஒலி (73) தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்தது. இதனால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் இடைக்கால பிரதமராக யாரை தேர்வு செய்வது என்பது தொடர்பாக தொடர் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. நேபாள ராணுவத் தளபதி அஷோக் சிக்டெல், இது தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொண்டார்.
இதில், நேபாளத்தின் இடைக்கால பிரதமராக நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி-க்கு போராட்டக்காரர்கள் ஒருமனதமாக ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை (செப்.12) இரவு சுசீலா கார்கி இடைக்கால பிரதமராக பதவியேற்றார். நேபாள அதிபர் ராம் சந்திர பவுடல் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்றதும் கார்கி தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் அடுத்த ஆண்டு மார்ச் 4 அன்று புதிய பொதுத் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது. பொதுத் தேர்தல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த ஆறு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அவசரநிலையை அமல்படுத்தவும் கார்கி பரிந்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.