நியூயார்க்: கடந்த மே மாதம் இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான மோதலை தான் சொன்னதால் அவர்கள் நிறுத்திக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
“அமெரிக்காவுக்கு வரி விதிப்பு முக்கியமான வருவாயாக அமைந்துள்ளது. அதோடு அதன் மூலம் சர்வதேச அளவில் அமைதியை நிலைநாட்ட எங்களால் முடிகிறது. வரி விதிப்பு விவகாரத்தை சுட்டிக்காட்டி போர்களை நான் நிறுத்தி உள்ளேன்.
அணு ஆயுத பலம் கொண்ட இந்தியாவும் பாகிஸ்தானும் மோதலில் ஈடுபட்டன. இதில் ஏழு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அந்தச் சூழலில் நான் அவர்களிடம் என்ன சொன்னேன் என்பதை இங்கு சொல்ல வேண்டாம் என கருதுகிறேன். ஆனால், நான் சொன்னதற்கு தகுந்த பலன் கிடைத்தது. அவர்கள் மோதலை நிறுத்திக் கொண்டார்கள். நிச்சயம் அதில் வரி விதிப்பு மற்றும் வணிகம் உள்ளது” என ஓவல் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ட்ரம்ப் தெரிவித்தார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதலை தான் நிறுத்தியதாக கடந்த மே 10-ம் தேதிக்கு பிறகு பல்வேறு முறை ட்ரம்ப் சொல்லி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோடு உலக அளவில் நடைபெறும் பல்வேறு நாடுகளுக்கு இடையிலான போரை தான் நிறுத்தியதாக ட்ரம்ப் தொடர்ந்து சொல்லி வருகிறார்.
இந்தியா – பாகிஸ்தான் மோதல்: காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி அன்று பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக இந்திய முப்படைகளும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள், விமானத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதல் மே 7-ம் தேதி தொடங்கி 10-ம் தேதிக்குள் முடிந்துவிட்டது. பாகிஸ்தான் தரப்பும் இந்திய எல்லையோர மாநிலங்களில் தாக்குதல் முயற்சியை மேற்கொண்டன. இருப்பினும் அதனை இந்திய பாதுகாப்பு படை இடைமறித்து அழித்தது.
அதன் பின்னர் இருதரப்புக்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது. இந்த போர் நிறுத்தத்தில் மூன்றாம் தரப்பினரின் தலையீடு இல்லை என்றும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நேரடி பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் ஏற்பட்டது என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.