பேங்காக்: கம்போடிய செனட் தலைவர் ஹன் சென் உடனான தொலைபேசி உரையாடல் கசிந்த விவகாரம் தொடர்பாக தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை அந்நாட்டு நீதிமன்றம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
அண்டை நாடான கம்போடியா எல்லையில் நிலவும் பதட்டங்களைத் தணிக்கும் நோக்கில், அந்நாட்டின் முன்னாள் பிரதமரும் கம்போடிய செனட் தலைவருமான ஹன் சென் உடன், தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா தொலைபேசியில் உரையாடினார். அப்போது, ஹன் சென்னை சமாதானப்படுத்தும் நோக்கில், தங்கள் நாட்டு ராணுவத் தளபதி குறித்து விமர்சித்துப் பேசியுள்ளார். இந்த உரையாடல் அடங்கிய ஆடியோ கசிந்ததை அடுத்து, தாய்லாந்து பிரதமருக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்த தாய்லாந்தின் அரசியலமைப்பு நீதிமன்றம், பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா நெறிமுறைகளை மீறியதாகக் குற்றம் சாட்டியது. இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட இருப்பதால், பிரதமரை பதவியில் இருந்து இடைநீக்கம் செய்தும் அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்துப் பேசிய பேடோங்டார்ன் ஷினவத்ரா, எனது பணி தடைபடுவதை நான் விரும்பவில்லை. இருந்தாலும், நீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொள்கிறேன். இந்த உத்தரவால் நான் கவலைப்படுகிறேனா என்று நீங்கள் என்னிடம் கேட்டால், ஆம் நான் கவலைப்படுகிறேன்,” என்று தெரிவித்தார்.
ஆடியோ கசிவை அடுத்து, தாய்லாந்தின் கூட்டணி அரசாங்கத்தில் இருந்து ஒரு பெரிய கட்சியான பூம்ஜைதாய் கட்சி வெளியேறியது. இதையடுத்து, தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்ன், புதிய அமைச்சரவை உறுப்பினர்களின் நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.