தைபே: தைவானை தாக்கிய அதி தீவிரப் புயல் மற்றும் கனமழையால் பழமையான ஏரியில் உடைப்பு ஏற்பட்டதில் 14 பேர் உயிரிழந்தனர், 124 பேர் காணாமல் போயினர்.
‘ரகாசா’ அதி தீவிரப் புயல் பலத்த மழையுடன் தைவானை தாக்கிய நிலையில், நேற்று கிழக்கு ஹுவாலியன் கவுண்டியில் உள்ள ஒரு பழமையான ஏரி உடைந்து, ஒரு பாலத்தை அடித்துச் சென்றது. இதனால் அடர்த்தியான சேறு மற்றும் சகதியுடனான தண்ணீர் நகரத்துக்குள் புகுந்தது. இதனால் அந்த நகரத்தில் உள்ள வீடுகளின் முதல் தளம் வரை சேறும், சகதியும் சூழ்ந்தது.
இதுகுறித்து பேசிய ஹுவாலியன் கவுண்டி அரசாங்க செய்தித் தொடர்பாளர் லீ குவான்-டிங், “ஏரி உடைப்பால் ஏற்பட்ட பாதிப்பில் 14 பேர் உயிரிழந்தனர், 18 பேர் காயமடைந்தனர். மேலும், இந்த சம்பவத்தால் 124 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ‘ரகாசா’ அதி தீவிரப் புயல் காரணமாக தைவான் முழுவதிலும் இருந்து 7,600 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்” எனத் தெரிவித்தார்.
ஏரி வெடிப்பு குறித்து பேசிய உள்ளூர் வாசிகள், “ஏரியில் ஏற்பட்ட உடைப்பு எரிமலை வெடிப்பது போல் இருந்தது. வெள்ளம் எங்கள் வீட்டின் முதல் தளத்திற்குள் நேராக பாய்ந்தது. ஏரி உடைந்த சில நிமிடங்களில், முதல் மாடியில் பாதியளவு தண்ணீர் உயர்ந்துவிட்டது” எனத் தெரிவித்தனர்.
ஜூலை முதல் அக்டோபர் வரை தைவானை அடிக்கடி வெப்பமண்டல புயல்கள் தாக்குகின்றன. ஜூலை தொடக்கத்தில் தைவானை தாக்கிய ‘டனாஸ்’ புயால் 50 சென்டிமீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்ததால், இரண்டு பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.