இஸ்லாமாபாத்: இந்திய பாதுகாப்புப் படையினர் கடந்த 7-ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது வான் வழியாக துல்லிய தாக்குதல் நடத்தினர். இதில், பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ் இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைமையகம் தரைமட்டமானது.
அந்த வளாகத்தில் தங்கியிருந்த அந்த அமைப்பின் தலைவரும் ஐ.நா.வின் சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் இடம்பெற்றிருப்பவருமான மசூத் அசாரின் மூத்த சகோதரி, 5 குழந்தைகள் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். எனினும் மசூத் அசார் வேறு இடத்தில் இருந்ததால் உயிர் தப்பினார்.
இந்நிலையில், இந்தியாவின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சட்டபூர்வ வாரிசுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அறிவித்துள்ளார். இதன்படி, 14 பேரை இழந்த மசூத் அசாருக்கு ரூ.14 கோடி கிடைக்கும். இதுமட்டுமல்லாமல், இந்தியாவின் தாக்குதலில் இடிந்த கட்டிடங்கள் மீண்டும் கட்டித் தரப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் தீவிரவாத முகாம்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தியதாகவும் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் தான் உயிரிழந்தவர்களின் (தீவிர வாதிகள்) வாரிசுக்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

