பெய்ஜிங்: திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று (ஜூலை 4) இந்தியாவுக்கான முக்கிய செய்தியை வெளியிட்டுள்ள சீன வெளியுறவு அமைச்சகம், “உள்நாட்டு விவகாரங்களில் தலையிட திபெத் பிரச்சினையைப் பயன்படுத்துவதை இந்தியா நிறுத்தும் என்று சீனா நம்புகிறது. மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துவதை இந்தியா தவிர்க்கும் என்றும் நம்புகிறது.” என்று தெரிவித்துள்ளது.
திபெத்திய புத்த மதத் தலைவரான 14-வது தலாய் லாமா இந்தியாவில் தஞ்சம் அடைந்து, இமாச்சலில் உள்ள தர்மசாலாவில் வசித்து வருகிறார். அவர் தனது 90-வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்ட அறிவிப்பில், “எனது மறைவுக்கு பிறகும் தலாய் லாமா மரபு தொடரும். அடுத்த தலாய் லாமாவை அங்கீகரிக்கும் அதிகாரம் காடன் போட்ராங் அறக்கட்டளைக்கு மட்டுமே உள்ளது” என்று கூறியிருந்தார்.
இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், “தலாய் லாமா உள்ளிட்ட பவுத்த தலைவர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளுக்கு சீன அரசின் ஒப்புதலும் அங்கீகாரமும் அவசியம்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பவுத்தரான மத்திய சிறுபான்மையினர் விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “அடுத்த தலாய்லாமா யார் என்பதை அதற்காக நிறுவப்பட்டுள்ள அமைப்பு மற்றும் தலாய் லாமாவின் விருப்பத்தின்படியே தீர்மானிக்கப்பட வேண்டும் என்றே தலாய் லாமாவை பின்பற்றும் அனைவரும் நினைக்கிறார்கள். தலாய் லாமாவையும் நடைமுறை மரபுகளையும் தவிர வேறு யாருக்கும் அதை தீர்மானிக்கும் உரிமை இல்லை.” என கூறி இருந்தார்.
கிரண் ரிஜிஜுவின் இந்த கருத்தை அடுத்து, அதற்கு சீனா தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது.