காத்மாண்டு: நேபாளத்தில் ஜென்-Z தலைமுறையினரின் ஊழல் எதிர்ப்பு போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. தலைநகர் காத்மாண்டுவில் உள்ள அதிபர், பிரதமர், உள்துறை அமைச்சரின் மாளிகைகளுக்கு தீ வைக்கப்பட்டன. நாடாளுமன்றம், அரசு அலுவலக வளாகம், உச்ச நீதிமன்றத்தை போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.
240 ஆண்டுகளாக மன்னராட்சி நடைபெற்று வந்த நேபாளத்தில், கடந்த 2008-ம் ஆண்டில் மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டது. கடந்த 2024 ஜூலையில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி உடைந்து ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து சிபிஎன் (யுஎம்எல்), நேபாள காங்கிரஸ் இணைந்து கூட்டணி அரசை அமைத்தன. சிபிஎன் (யுஎம்எல்) தலைவர் சர்மா ஒலி பிரதமராக பதவி வகித்தார். நேபாளத்தில் அடுத்தடுத்து ஆட்சிகள் மாறினாலும் ஊழல் மட்டும் குறையவில்லை என்ற குற்றச்சாட்டு வலுத்தது.
இன்றளவும் உலகின் ஊழல் மிகுந்த நாடுகளில் ஒன்றாக அந்த நாடு திகழும் சூழலில், நேபாள சமூக வலைதளங்களில் அண்மையில் ‘நெப்போ பேபி’ என்ற பெயரில் வீடியோக்கள் பரவின. அதாவது, நேபாளத்தின் அரசியல் தலைவர்கள், மூத்த அரசு அதிகாரிகள், பிரபலங்களின் வாரிசுகள் தங்களின் ஆடம்பர வாழ்க்கையை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர். நேபாளத்தின் மொத்த மக்கள் தொகையான 3 கோடி பேரில் பாதிக்கும் மேற்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
பெரும்பான்மையான மக்கள் வறுமையில் வாடும் நிலையில், சமூக வலைதளங்களில் பரவிய ‘நெப்போ பேபி’ வீடியோக்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. ஊழல் அரசியல் தலைவர்களை விமர்சித்து பெரும்திரளானோர் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டனர். இந்தச் சூழலில்தான் ஃபேஸ்புக், யூ டியூப், எக்ஸ், டெலிகிராம் உள்ளிட்ட பதிவு செய்யப்படாத 26 சமூக வலைதள கணக்குகளை நேபாள அரசு கடந்த 5-ம் தேதி முடக்கியது.
இது, நேபாள இளம் தலைமுறையினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களாக 28 வயதுக்கு உட்பட்ட இளம் தலைமுறையினர் தலைநகர் காத்மாண்டுவில் குவிந்து ஊழலுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் திங்கள்கிழமை நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றனர். நேபாள பிரதமர் சர்மா ஒலி வீட்டின் மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்தினர். இதன்காரணமாக போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 19 பேர் உயிரிழந்தனர். 400-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து நேபாளம் முழுவதும் வன்முறை, கலவரம் வெடித்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து தலைநகர் காத்மாண்டுவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பெரும் எண்ணிக்கையில் திரண்டனர். காத்மாண்டுவில் உள்ள அதிபர், பிரதமர், உள்துறை அமைச்சரின் மாளிகைகளுக்கு போராட்டக்காரர்கள் நேற்று தீ வைத்தனர். நாடாளுமன்றத்தின் ஒரு பகுதிக்கும் தீ வைக்கப்பட்டது. உடனடியாக பாதுகாப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பிரதமர் சர்மா ஒலி ஹெலிகாப்டரில் பாதுகாப்பான இடத்துக்கு தப்பிச் சென்றார். அவர் துபாயில் தஞ்சமடையக்கூடும் என்று கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் பிரதமர் சர்மா ஒலி செவ்வாய்க்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பெரும்பாலான அமைச்சர்களும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ஏராளமான எம்எல்ஏக்களும் பதவி விலகி உள்ளனர்.
காத்மாண்டுவில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர்கள் பிரசண்டா, ஷெர் பகதூர் தேவ்பா, அமைச்சர் பிருத்வி உட்பட மூத்த அரசியல் தலைவர்களின் வீடுகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். முன்னாள் பிரதமர் ஷெர் பகதூர் தேவ்பாவை ஒரு தரப்பினர் அடித்து உதைத்தனர். இதில் அவர் படுகாயமடைந்தார். நேபாள நிதித் துறை அமைச்சர் விஷ்ணு பவுடாலை, போராட்டக்காரர்கள் காத்மாண்டின் பிரதான தெருவில் ஓடவிட்டு அடித்து உதைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்தியா, நேபாளம் இடையே விசா இன்றி பயணம் மேற்கொள்ள முடியும். இரு நாடுகள் இடையே மிக நெருங்கிய நட்புறவு நீடிக்கிறது. தற்போதைய புள்ளிவிவரங்களின்படி நேபாளத்தில் சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி நேபாள ராணுவத்திடம் மத்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. நேபாளத்தில் வசிக்கும் இந்தியர்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வேளியே வர வேண்டாம் என்று காத்மாண்டில் உள்ள இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.