வாஷிங்டன்: தென் கொரியா மற்றும் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த வரிவிதிப்பு வரும் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என்று ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன் தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அனுப்பிய கடிதங்களின் நகல்களையும் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் ட்ரம்ப் கூறியிருப்பதாவது: “வரும் ஆகஸ்ட் 1 முதல் அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் ஜப்பான் / கொரியா ஆகிய நாடுகளின் அனைத்து வகையான பொருட்களுக்கும் தனித்தனியாக 25 சதவீத வரி விதிக்க உள்ளோம். உங்கள் நாடுகளுடன் எங்களுக்கு உள்ள வர்த்தக பற்றாக்குறை ஏற்றத்தாழ்வை நீக்குவதற்கு இந்த 25% வரி என்பது மிகவும் குறைவு என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஏதேனும் காரணத்துக்காக உங்கள் வரிகளை உயர்த்த நீங்கள் முடிவு செய்தால், நீங்கள் எவ்வளவு எண்ணிக்கையில் உயர்த்தத் தேர்வுசெய்தாலும், அது நாங்கள் வசூலிக்கும் 25 சதவீதத்தில் சேர்க்கப்படும்” இவ்வாறு ட்ரம்ப் அந்த கடிதங்களில் தெரிவித்துள்ளார்.
இந்த கடிதங்கள் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா மற்றும் தென் கொரிய அதிபர் லீ ஜே-மியுங் இருவருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் கூட அமெரிக்க அதிபரிடமிருந்து வரி தொடர்பான கடிதம் கிடைக்கப் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது . மத்திய அரசு மற்றும் வாஷிங்டன் இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்கான விரிவான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பிரிக்ஸ் கூட்டமைப்பின் அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் எச்சரித்திருந்தார். அமெரிக்க நிர்வாகம் புதிய வரி விதிப்பு மற்றும் திருத்தப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அதிகாரபூர்வமாக கடிதம் அனுப்பும் என்று கூறியிருந்தார். அதன் முதல்கட்டமாக தற்போது ஜப்பான் மற்றும் தென்கொரியாவுக்கு ட்ரம்ப் கடிதம் அனுப்பியுள்ளார்.