டோக்கியோ: ஜப்பானின் தொழில்நுட்பமும், இந்தியாவின் திறமையும் இணைந்தால், 21-ம் நூற்றாண்டில் புதிய தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்த முடியும் என்று டோக்கியோவில் நடைபெற்ற இந்திய, ஜப்பான் வருடாந்திர மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 15-வது இந்திய, ஜப்பான் வருடாந்திர மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது: உலகில் வேகமாக வளர்ந்து வரும் மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது. ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கிறது. இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் 40 பில்லியன் டாலருக்கு அதிகமாக முதலீடு செய்துள்ளன. 80 சதவீத ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் கிளைகளை விரிவுபடுத்த விரும்புகின்றன.
இந்தியா – ஜப்பான் இடையிலான நட்புறவு வலுவடைந்து வருகிறது. உற்பத்தி, ஆட்டோமொபைல், பேட்டரி, ரோபாட்டிக்ஸ், செமிகண்டக்டர், கப்பல் கட்டுமானம், அணுசக்தி ஆகிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன. ‘இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள், உலகத்துக்காக உற்பத்தி செய்யுங்கள்’ என ஜப்பானிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.
‘வரும் 2030-ம் ஆண்டுக்குள் 500 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி’ என்ற இலக்கை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. 2047-ம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி என்ற இலக்கையும் நிர்ணயித்துள்ளோம். எனவே. மரபுசாரா எரிசக்தி துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும்.
தொழில்நுட்ப சக்தி மையமாக ஜப்பானும், திறமை சக்தி மையமாக இந்தியாவும் விளங்குகின்றன. ஜப்பானின் தொழில்நுட்பமும், இந்தியாவின் திறமையும் இணைந்தால், 21-ம் நூற்றாண்டில் புதிய தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தி நாம் சாதனை படைக்க முடியும். உலகத்தின் தேவைகளை இந்திய இளைஞர்களால் பூர்த்தி செய்ய முடியும். இந்தியாவின் திறன்சார் மனித வளத்தை ஜப்பான் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு பிரதமர் பேசினார்.
முக்கிய ஒப்பந்தங்கள்: இதை தொடர்ந்து, ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவை, மோடி சந்தித்தார். அப்போது இரு நாடுகள் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குறிப்பாக, அடுத்த 10 ஆண்டுகளுக்கான சிறப்பு திட்டம் தொடர்பான முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்படி, பொருளாதார ஒத்துழைப்பு, பொருளாதார பாதுகாப்பு, போக்குவரத்து, சுற்றுச்சூழல், தொழில்நுட்பம், புதுமை கண்டுபிடிப்புகள், சுகாதாரம் உள்ளிட்ட 8 துறைகளில் இந்தியாவும், ஜப்பானும் இணைந்து செயல்படும்.
பாதுகாப்பு விவகாரங்களில் பிராந்திய, சர்வதேச அளவில் ஒன்றிணைந்து செயல்படும் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. இரு நாடுகளும் பரஸ்பரம் திறன்சார் மனிதவளத்தை பயன்படுத்த விரிவான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, இரு தரப்பிலும் 5 லட்சம் பேர் இரு நாடுகளிலும் பணியாற்றுவார்கள். குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்த 50,000 தொழிலாளர்கள் ஜப்பானில் பணியமர்த்தப்படுவார்கள்.
சுற்றுச்சூழலை பாதுகாக்க மரபுசாரா எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்க இரு நாடுகளும் உறுதியேற்றன. இந்த துறையில் ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இணைந்து செயல்பட ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இஸ்ரோவின் சந்திரயான்-5 திட்டத்தில் ஜப்பான் விண்வெளி நிறுவனமும் பங்கேற்க வகை செய்யும் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஹைட்ரஜன், அமோனியா உற்பத்தியில் தொழில் நுட்பங்களை பரிமாற்றம் செய்யவும். இணைந்து ஆராய்ச்சி செய்யவும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேலும் பொது சுகாதாரம், கழிவுநீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பாகவும் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்தியாவில் ரூ.6 லட்சம் கோடி முதலீடு: பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் இஷிபாவும் செய்தியாளர்களை சந்தித்தனர். பிரதமர் மோடி கூறியபோது, “அடுத்த 10 ஆண்டுகளில் ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் ரூ.6 லட்சம் கோடியை முதலீடு செய்யும். அடுத்த ஆண்டு இந்திய, ஜப்பான் வருடாந்திர மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. இதில் ஜப்பான் பிரதமர் பங்கேற்க அழைப்பு விடுக்கிறேன். ரஷ்யா – உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இருவரும் சமீபத்தில் என்னிடம் பேசியபோதும் இதை உறுதிபட தெரிவித்தேன்” என்றார்.
‘போதி தருமன்’ பொம்மை பரிசு: டோக்கியோவில் பிரதமர் மோடியை, ஜப்பானின் ஷோரின்சான் தருமா புத்த கோயிலின் தலைமை குரு ரெவ் நேற்று சந்தித்தார். அப்போது, மோடிக்கு ‘தருமா’ பொம்மையை அவர் பரிசாக வழங்கினார்.
கடந்த 5-ம் நூற்றாண்டில் தமிழகத்தின் பல்லவ மன்னர் பரம்பரையை சேர்ந்த சேர்ந்த இளவரசர் போதி தருமன், சீனாவுக்கு சென்று புத்த மதத்தை பரப்பினார். அங்கிருந்து ஜப்பான், வியட்நாம், கொரியாவுக்கு புத்த மதம் பரவியது. ஜப்பானிய கலாச்சாரத்தில் தருமா பொம்மையை பரிசாக வழங்குவது மங்கலம், அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது.