வாஷிங்டன்: சீன ராணுவ அணிவகுப்பில் ரஷ்யா, வட கொரியத் தலைவர்கள் பங்கேற்றது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.
இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்து 80 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், சீனாவில் நேற்று விழா நடத்தப்பட்டது. சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு விழாவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ஈரான் அதிபர் மசூத் பெஜேஷ்கியன் உள்பட சீனாவின் 26 நட்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.
சீனாவின் நவீன ஏவுகணைகளும் ராணுவத் தளவாடங்களும் போர் விமானங்களும் இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியின்போது ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை திறந்தவெளி வாகனத்தில் சென்று ஏற்றுக்கொண்ட ஜி ஜின்பிங், “எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் சீனா அஞ்சாது, மனிதகுலமானது போர் அல்லது அமைதி ஆகியவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் சூழலுக்கு மீண்டும் தள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இந்த அணிவகுப்பு குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருப்பதாவது: வெளிநாட்டு படையெடுப்பாளர்களிடம் இருந்து சீனா சுதந்திரம் பெறுவதற்காக அமெரிக்கா அளித்த மகத்தான ஆதரவையும், அமெரிக்கர்கள் சிந்திய ரத்தத்தையும் அதிபர் ஜி ஜின்பிங் குறிப்பிடுவாரா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
சீன வெற்றிக்காக உயிரிழந்த அமெரிக்கர்கள் மதிக்கப்படுவார்கள், நினைவுகூரப்படுவார்கள் என்று நான் நம்புகிறேன். அமெரிக்காவுக்கு எதிராகச் செய்யும் சதிகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் – வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இருவரும் சுமார் இரண்டரை மணிநேரம் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் ரஷ்ய நாட்டுக்கு வருமாறு கிம் ஜாங் உன்னுக்கு, ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில், அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளவில்லை.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் (எஸ்சிஓ) பங்கேற்பதற்காக 2 நாள்கள் சீனப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, இந்த அணிவகுப்பில் கலந்துகொள்ளாமல் நாடு திரும்பி உள்ளார்.